சென்னை: மார்வெல் தயாரிப்பில் இந்த வருடம் ’டெட்பூல் & வால்வரின்’, ’ஜோக்கர் 2’ ஆகிய படங்கள் வெளியாகியது. இதில் ‘டெட்பூல் & வால்வரின்’ ஹிட் ஆக, ’ஜோக்கர் 2’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை அடுத்து இந்த வருடத்தில் மார்வெல் காமிக்ஸ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தியத் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு முன்னதாக நேற்று படம் வெளியானது. படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தைப் பார்க்கலாம்.
எடி (டாம் ஹார்டி) உடலை வெனம் கட்டுப்படுத்தி அவரை ஆரம்பத்தில் கொடூர வில்லனாக காட்டி வந்தது. ஒரு கட்டத்தில் அவர் வெனமை கட்டுப்படுத்தி உலகை காப்பாற்றும் நபராக மாறினார். அதன் பிறகு உலகத்தை விட்டே அதை அனுப்பி வைக்க அவர் முந்தைய பாகத்தில் முயற்சி செய்திருப்பார். அந்த கதை அங்கே முடியாமல் அதன் தொடர்ச்சியாகவே, ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்தக் கதையின் வில்லனான நல் (knull) கோடெக்ஸ் (codex) தேவைப்படுகிறது. இந்த கோடெக்ஸ் வொனோம் & எடி ஒன்று சேரும்போதுதான் இருக்கும். இந்த கோடெக்ஸ் கிடைக்க வேண்டுமென்றால் எடி அல்லது வொனோம் இவர்களில் யாராவது ஒருவர்தான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கான அச்சுறுத்தலை தனது ஏலியன்ஸ் மூலம் கொடுக்கிறது நல். இந்த கோடெக்ஸ் நல்லுக்கு ஏன் தேவைப்படுகிறது? நல் தரும் பிரச்சினைகளை வெனோம் எப்படி எதிர்கொள்கிறார்? வெனோம் & எடி இருவரில் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கான பதில்தான் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்'.
வெனோம் படங்களின் மிகப்பெரிய பலமே வெனோம் மற்று எடி இருவருக்குள்ளும் நடக்கும் நகைச்சுவையான உரையாடல்தான். அந்த விஷயம் இந்த பாகத்திலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக முதல் பாகத்தில் எடிக்கு ஒரு பிரச்சினை எனும்போது வெனோம் வெளியே வருவது, குதிரை சவாரி, தண்ணீருக்கு அடியில் நடக்கும் சண்டைக் காட்சிகள், கிளைமாக்ஸில் நடக்கும் விறுவிறு சண்டைக் காட்சிகள் இவை அனைத்தும் வெனோம் ரசிகர்களுக்கான தருணங்கள்தான். எடி கதாபாத்திரத்தில் டாம் ஹார்டி அசத்தியிருக்கிறார். வெனோமுடன் நடக்கும் செல்ல சண்டைகள், வெனோமின் கேலிகளை அமைதியாக எதிர்கொள்வது, வெனோமை பிரியும்போது காட்டும் வலி என அனைத்து உணர்ச்சிகளையும் திரையில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். மார்வெல் படங்களின் மிகப்பெரிய பலமே விஎஃப்எக்ஸ் காட்சிகள்தான். இதிலும் அது பிசிறில்லாமல் வந்திருக்கிறது. மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்தின் நீளம் 1.30 மணி நேரம்தான் என்றாலுமே முதல் பாதி மெதுவாக இழுவையாகவே நகர்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை திரையில் கொண்டு வந்தது நன்றாக இருந்தாலும், இதற்கு முன்பாகவே பல மார்வெல் படங்களில் பார்த்து பழகிய விஷயங்கள் என்பது மைனஸ். முதல் பாதி ஓகே ரகமாகவும் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக வந்திருக்கலாமோ என்று தோன்றும் ‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ வெனம் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம்தான்.