இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் காட்டம்!


யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது என சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் காட்டம் தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் இர்ஃபான் முன்பு தனது பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி வெளிப்படையாக அறிவித்து சர்ச்சையில் சிக்கி நிலையில், தனது யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்கினார். இப்போது, தனது குழந்தைக்கான தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதற்காக இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது, ஆபரேஷன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார். இதனை வீடியோவாக எடுத்த அவர், தனது யூடியூப் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்த நிலையில் அதை தன் சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இது குறித்து பேசுகையில், “யூடியூபர் இர்பான் கடந்த வாரம் சமூகவலைதளத்தில் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, அதனை வீடியோவாக வெளியிட்டது கண்டிக்க கூடியது. இர்பான் அறுவை அரங்கிற்குள் சென்று மருத்துவர் அல்லாத ஒருவர் தொப்புள்கொடியைத் துண்டித்தது தேசிய மருத்துவ சட்ட விதிகளை மீறியது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்படி நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இர்பான் மீது புகார் அளித்துள்ளோம். தொப்புள்கொடியை அறுக்க அனுமதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் தரப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவ இயக்குனரத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் பயிற்சி செய்வது தடை விதிக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.

இர்பான் மனைவிக்கு ஸ்கேன் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் தமிழகத்தில் மட்டும் தான் தடை. துபாயில் சென்று எடுத்ததால் மன்னிப்பு கேட்டதால் அதனை ஏற்றுக்கொண்டோம். இர்பான் அரசியல் பிண்ணனி உள்ளதால் நடவடிக்கை எடுக்க தயக்கமா என்று கேட்கிறார்கள். தவறு செய்தவர்களை இந்த அரசு காப்பாற்ற முனையாது. தொப்புள்கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் சுகாதாரத்துறை விடமாட்டோம்” என்றார்.

x