சிம்புவை இயக்குகிறார் அஸ்வத் மாரிமுத்து


நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக அவர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்து சிம்பு நடிக்கும் படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் அவரின் புதிய படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதன்படி அவர் நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இவர் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கியவர். இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சிம்புவின் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. 1990-களில் நடப்பதுபோல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் படக்குழு தெரிவித்துள்ளது.

x