தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இம்மாதம் 27ம் தேதி மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி செயலாளர் சரவணன் திடீர் மாரடைப்பால் காலமானது கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்தவர் சரவணன். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே நடிகர் விஜயின் தீவிர ரசிகர். விஜய் ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பாளராக இருந்த இவர் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் மாநாட்டு பணிகளில் தீவிர ஆர்வம் காட்டி வந்தவர் நேற்று மாலை வீடு திரும்பியபோது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.
அவரை குடும்பத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக சொல்லியிருக்கின்றனர்.
புதுச்சேரியில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலைப் பார்த்த புஸ்ஸி ஆனந்த் கதறி அழுதார். சரவணனின் மறைவுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கிறார்.