நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்: நவ.8ம் தேதி காதலரைக் கரம் பிடிக்கிறார்!


நடிகை ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான யோகா மாஸ்டர் தவானை திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்களது திருமணம் ரிஷிகேஷில் உள்ள கோயில் ஒன்றில் நவம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

'ஜோக்கர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் அதன் பின்னர், படங்களில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், மொட்டை மாடி ஃபோட்டோஷூட் மூலமாக ரசிகர்களிடையே வைரலானார். இந்த புகழ் வெளிச்சம் அவருக்கு ‘பிக்பாஸ்’, ‘குக் வித் கோமாளி’ என சின்னத்திரையில் வாய்ப்புகளைப் பெற்று தந்தாலும் சினிமாவில் அவர் எதிர்பார்த்த பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இதனால் கொஞ்ச நாட்கள் யோகா, உடற்பயிற்சி, ஆன்மிக சுற்றுலா என வலம் வந்தார். 34 வயதாகும் ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் திருமணம் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சென்னையில் நவம்பர் 15ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில், திருமண ஷாப்பிங்கில் பிஸியாகி வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

x