சென்னை: பட விழா ஒன்றில் தனது கர்ப்பத்தை அறிவித்திருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.
’காலா’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த மியூசிஷியனான பெனடிக் டெய்லர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் தங்களது பணிகள் காரணமாக மும்பை-இங்கிலாந்து எனத் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால், இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று கூடத் தகவல் பரவியது. இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்காமல் அமைதியாக இருந்த ராதிகா ஆப்தே, இப்போது தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
லண்டனில் நடந்த பி.எஃப்.ஐ திரைப்பட விழாவில் ராதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆங்கிலப் படமான ‘சிஸ்டர் மிட்நைட்’ படம் ப்ரீமியர் ஆகியிருக்கிறது. இதற்காக கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கருப்பு நிற உடையில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து, தன் கர்ப்ப செய்தியை அறிவித்திருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.