தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு இவரின் டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வைரலானது. பின்னர், பல நடிகைகளின் 'டீப் ஃபேக்' வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக ராஷ்மிகா மந்தனாவை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘சைபர் கிரைம் என்பது உலகில் உள்ள தனிநபர்கள், வணிகர்கள் மற்றும் சமூகங்களைப் பாதிக்கும் ஆபத்தான மற்றும் பரவலான அச்சுறுத்தலாகும். இந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவள் என்ற முறையில், இது தொடர்பான விழிப்புணர்வையும், இணைய குற்றங்களில் இருந்து மக்கள், தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் மக்களிடம் கொண்டு சென்று மாற்றத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய அரசிடமிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.