’வேட்டையன்’ படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தவறாகப் பேசியதாக சர்ச்சை வெடித்த நிலையில் அதுபற்றி அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கும் மேலான வசூலைப் பெற்றதாகப் படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரோமோஷனல் பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி 'வேட்டையன்’ படம் வெளியான இரண்டு நாட்களில் தன்னுடைய சமூகவலைதளங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது, “சமீபத்தில் பெரிய பெரிய நடிகர்கள் நடித்த பெரிய படத்திற்கு தனித்தனியாக கதாபாத்திர அறிமுகம் செய்தார்கள். பெரிய அளவில் புரோமோஷனும் செய்தார்கள். ஆனால், அது எதுவும் கைக்கொடுக்கவில்லை” என்று சொல்லி இருந்தார். இவர் ‘வேட்டையன்’ படத்தைத்தான் மறைமுகமாக சொல்கிறார் என சர்ச்சை வெடித்தது.
இதுபற்றி அவர் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். “நான் சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகன். ‘வேட்டையன்’ படத்தை குறை சொல்லவில்லை. ‘கேல் கேல் மெயின்’ என்ற பாலிவுட் படத்தைப் பற்றிதான் பேசினேன். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது” என்று பேசியிருக்கிறார்.