ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது: ஜீ குழுமத்தின் சிஇஓ புனித் கோயங்கா தகவல்


மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜீ ஸ்டுடியோஸ் ரத்தன் டாடாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக தயாரிக்கும் என்று ஜீ குழுமத்தின் சிஇஓ புனித் கோயங்கா தகவல் தெரிவித்துள்ளார்.

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நேற்று மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், ஜீ குழுமத்தின் சிஇஓ புனித் கோயங்கா, ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.

“அந்த மாபெரும் மனிதருக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், அவர் தனது சமூக மற்றும் தொழில்முனைவு முயற்சிகள் மூலம் உலகில் அவர் உருவாக்கிய நேர்மறையான தாக்கத்திற்காகவும், ஸ்ரீ ரத்தன் டாடா செய்த மகத்தான பணியை தேசத்திற்கும் உலகிற்கும் பெரிய அளவில் வழங்க வேண்டும் என்று நம்புவதாக புனித் கோயங்கா தெரிவித்திருந்தார்.

இது குறித்து ZEELன் தலைவர் ஆர்.கோபாலன் கூறுகையில், “அனுமதி கிடைத்த பிறகு, ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜீ ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கும். "அவரது வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கும், மில்லியன் கணக்கானவர்களை அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த திட்டமானது டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெறுவதற்கு உட்பட்டதாக இருக்கும்" என்றார்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் ஜீ ஸ்டூடியோஸ் உருவாக்கும் லாபம் சமூகக் காரணங்களுக்காகவும் ஏழைகளுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் என்பதை ஜீ தெளிவுப்படுத்தியுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸின் தலைமை வணிக அதிகாரி உமேஷ் பன்சால் கூறுகையில், “ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் பற்றிய முழு நீள ஆவணப்படம்/வாழ்க்கைத் திரைப்படத்தில் பணியாற்றுவதில் ஜீ ஸ்டுடியோஸின் ஒட்டுமொத்த குழுவும் மிகவும் பெருமையடைகிறது. இத்தகைய சிறந்த ஆளுமை மற்றும் அவரது பாரம்பரியத்தைக் கொண்டாடுவது எங்கள் கடமை என்று நாங்கள் நம்புகிறோம். ஜீ ஸ்டுடியோ அவரது பங்களிப்பைப் பற்றிய உண்மையான கணக்கை வழங்குவதற்கும் அவரது வாழ்க்கையை சரியான முறையில் சித்தரிப்பதற்கும் எந்தக் கல்லையும் விட்டுவிடாது என்று நாங்கள் இந்த தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்" என்றார்.

x