வேட்டையன்- திரை விமர்சனம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் நேர்மை தவறாத எஸ்பியாக அதியன் (ரஜினிகாந்த்). என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் கொலை குற்றவாளிகளையும், கஞ்சா விற்பவர்களையும், தாதாக்களையும் தொடர்ந்து என்கவுண்டர் செய்து கொல்கிறார். இவரது நேர்மை பற்றி தெரிந்து கொள்ளும் அரசு பள்ளி ஆசிரியை சரண்யா (துஷாரா விஜயன்) தான் வேலை பார்க்கும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது பற்றி கடிதம் மூலம் ரஜினிக்கு தெரியப்படுத்கிறார். இதனால், துஷாராவுக்கு நற்பெயர் கிடைக்க அவர் எதிர்பார்த்திருக்கும் சென்னைக்கு பணி மாறுதலும் கிடைக்கிறது. ஆனால், சென்னையில் சரண்யா தான் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார்? காரணம் என்ன? இந்த கொலையாளியை ரஜினி கண்டுபிடித்தாரா? எண்கவுண்டர்தான் குற்றங்களுக்கு தீர்வா? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் 'வேட்டையன்'.

நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப், மஞ்சு வாரியர், பகத் பாசில்னு என மல்டி ஸ்டாரர் படமா இது இருந்தாலும் இவர்களைத் தாண்டிய ஒரு சூப்பர் ஹீரோவாக கதையை ஹைலைட் செய்திருக்கிறார் இயக்குநர் ஞானவேல். கல்வி, கோச்சிங் கிளாஸ் என்ற பெயரில் ஏழை, எளிய மாணவர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள், அவர்களுடைய நெருக்கடிகள் என்ன, இதுக்கு பின்னால் நடக்கும் மாஃபியா தான் கதை. இதில் ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோவுக்குத் தேவையான விஷயங்கள் சேர்த்து கொண்டு வந்ததில் கவனம் பெறுகிறார்.

கதையில் நடிகர்கள் ரஜினி, அமிதாப், பகத் பாசில், துஷாரா, மஞ்சு வாரியர் என பல நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களை ‘பான் இந்தியா’ என்ற பட வெளியீட்டு விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் கதையில் அவர்களுடைய கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் கொடுத்திருப்பது நன்று. படத்தில் ஹிட்டான ‘மனசிலாயோ’ பாட்டு படத்தின் தொடக்கத்திலேயே வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆனால், இந்த பில்டப் எல்லாம் முடிந்த பிறகு இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக கதை முதல் பாதி வரை வேகம் பிடிக்கிறது.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் ஒவ்வொரு காட்சியிலும் மாஸாக நடித்துள்ளார். துஷாரா, பகத்துடன் அவருக்கு இருக்கும் பாசம், தப்பான என்கவுண்டர் செய்து விட்டோம் என்ற குற்றவுணர்ச்சி, ஸ்டைலாக கண்ணாடி போடுவது, ஃபோன் பேசுவது என வழக்கம் போல குறையில்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார். அனிருத் இசை படத்திற்கு பெரும் பலம். மனசிலாயோ பாடலுக்கு தியேட்டர் அதிர்கிறது. குறிப்பாக, ஹண்டர் வந்துட்டார் தீம் பாடலை வரிகளோடு சேர்த்திருக்கும் இடம் பக்கா.

என்கவுண்டருக்கு எதிரான மனப்பான்மை கொண்டவராக, மனித உரிமைகள் ஆணைய அதிகாரியாக வரும் நடிகர் அமிதாப்பச்சன் (சத்யதேவ்) தன் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். ‘மரணம் எந்தவொரு குற்றத்துக்கு தீர்வு கிடையாது’, ‘அநியாயம் நடக்கும் போது போலீஸ் அமைதியா இருக்கறதை விட அதிகாரத்தை கையில எடுக்கனும்’ போன்ற வசனங்கள் ஷார்ப். திருடன் பேட்டரிக் கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில். தன்னுடைய புத்திசாலித்தனத்தை கொண்டு ரஜினிக்கு உதவுவது, ரஜினி மீது பாசம் காட்டுவது, அவரை அவ்வப்போது டென்ஷன் செய்வது என சிரிக்க வைத்திருக்கிறார்.

கதையில் குறைந்த நேரமே வந்தாலும் வலுவான கதாபாத்திரம் துஷாரா விஜயனுக்கு. சிறப்பாக நடித்திருக்கிறார். நடிகர்கள் மஞ்சு வாரியர், ராணா, அபிராமி, ரித்திகா சிங் எல்லோரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். நிறம், வாழ்க்கை முறை இவற்றை எல்லாம் வைத்து ஒருவரை எப்படி சமூகம் எடை போடுகிறது, அவர்களுக்கான பாதிப்புகள் என்ன, அதிகாரம் பணம் படைத்தவர்களிடம் எப்படி செயல்படுகிறது போன்ற விஷயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார் ஞானவேல்.

ரஜினிகாந்த் தவறான நபரை தான் என்கவுண்டர் செய்திருக்கிறார் என்பதை முதலிலேயே நம்மால் யூகிக்க முடிகிறது. வில்லனை நெருங்கும் காட்சிகளைப் பரபரப்பாக படமாக்கி இருப்பவர்கள் அந்த வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் சில சண்டைக்காட்சிகளையும் நீக்கியிருக்கலாம். ஆக மொத்தத்தில், தான் எடுத்துக் கொண்ட கதைக்கு மாஸ் ஹீரோ- கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்து வின்னர் ரேஸில் முந்தியிருக்கிறது ‘வேட்டையன்’.

x