சென்னை: தனது குடும்பத்தின் வாழ்க்கை ஒரே நாளில் மாறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனலான தருணம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’. தீபாவளி வெளியீடாக இந்த மாத இறுதியில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்காக படக்குழு அனைவரும் பேட்டி கொடுத்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தின் கதையோடு தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றையும் ஒப்பிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “’அமரன்’ படத்திற்காக நேரடியாக இந்திய ராணுவத்தின் இடத்திற்கே சென்று படப்பிடிப்பு நடத்தினோம். அங்கிருந்த வீரர்கள் எங்களுக்குக் கைத்தட்டி பாராட்டியது பெருமையாக இருந்தது. இந்தப் படத்திற்காக கஷ்டப்பட்டு நடித்தேன் என்று சொல்வதை விட இஷ்டப்பட்டு நடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
முகுந்தின் மனைவி இந்துவைப் பார்க்கும்போது என் அம்மாவையும் அக்காவையும் பார்த்தது போல இருந்தது. ஏனெனில், எங்கள் அப்பா வேலைப்பளு காரணமாக காலமானார். திடீரென அவர் எங்களிடம் இல்லை என்ற விஷயத்தை சொன்னபோது எங்களால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான், அக்கா, அம்மா என மூன்று பேர்தான் குடும்பம் என்றானது. என் அப்பா இறந்தபோது அவருக்கு 50 வயது. முகுந்த் இறந்தபோது அவருக்கு 30 வயது. ஒருவர் இல்லை என்ற கஷ்டத்தை சமாளிப்பது கடினம். அதனாலேயே, நான் இந்துவிடம் அதிகம் பேசவில்லை. இந்தப் படம் வெளியாகும்போது என் அம்மாவையும் அக்காவையும் கூட்டிச் சென்று படம் பார்க்க வைக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.