சென்னை: மருத்துவமனையில் இருக்கும் போது உடல்நலம் பெற தன்னை வாழ்த்திய பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
அதேபோல தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு தனித்தனியாக நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.