`வேட்டையன்' படத்துக்கு தடை விதிக்க மறுப்பு: தணிக்கை வாரியம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு


மதுரை: நடிகர் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக தணிக்கை வாரியம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உலகநேரியைச் சேர்ந்த பழனிவேலு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

என்கவுன்ட்டர் ஆதரவு வசனம்: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டீசர் செப். 20-ல் வெளியானது. அதில் சட்டவிரோத என்கவுன்ட்டரை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை உருவாக்கும் வகையிலான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வசனத்தை நீக்கக் கோரி,திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, வேட்டையன் படத்தில் இடம் பெற்றுள்ள, என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் வசனங்களை நீக்கவோ அல்லதுமியூட் செய்யவோ உத்தரவிட வேண்டும். அதுவரை வேட்டையன் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “என்கவுன்ட்டரை ஆதரிக்கும் வசனங்கள் இருப்பதால், வேட்டையன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்து, மனு தொடர்பாக மத்திய, மாநில திரைப்படத் தணிக்கை வாரியம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள `வேட்டையன்’ திரைப்படம் உலகமெங்கும் வரும் 10-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x