மதுரை: பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சமூக வலைதளங் களில் அவதூறு பரப்பியதாக சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது பழநி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி,உயர் நீதிமன்ற அமர்வில் மோகன்ஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ‘‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான்,முருக பக்தர். பழநி முருகன் கோயில்பஞ்சாமிர்தம் குறித்து எந்தவிதமானஅவதூறுகளையும் பரப்பவில்லை. செவிவழிச் செய்தியாக நான் கேள்விப்பட்டதையே பேசினேன். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார். அரசு தரப்பில், ‘‘மனுதாரர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநராக உள்ள நிலையில், சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் நோக்கில் பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை உண்மைக்கு மாறான தகவலை உறுதிப்படுத்தாமல் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மனுதாரரை சமயபுரம் போலீஸார் கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் உள்ளார். அதன்பிறகும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்.எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, ‘‘மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இருக்காமல், எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன்பு உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் தெரிவிக்கக் கூடாது. உண்மையில் பழநி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம். அல்லதுபழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத் தில் சென்று கூட 10 நாள்கள் சேவைநோக்கில் பணியாற்றலாம்.
மனுதாரர் பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரபலதமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் தமிழகம் முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.’’ இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்