கடவுளின் அவதாராம் என தங்களை நினைத்துக் கொள்பவர்களுக்கு சிகிச்சை தேவை என பாடகர் ஸ்ரீனிவாஸ், மோடியை மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னை கடவுளின் அவதாரம் என்று பொருள்படும் ரீதியில் பேசியிருந்தார். அதாவது, “என் அம்மா இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும் போது நான் உயிரியல் ரீதியாக பிறக்க வாய்ப்பில்லை என புரிந்தது.
கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார் என்பதை முழுமையாக நம்புகிறேன்” என்று பேசினார். இது கடுமையான சர்ச்சைகளை நெட்டிசன்கள் மத்தியில் சந்தித்தது. இதைக் குறிப்பிட்டு பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், ‘ஒருவர் தன்னை கடவுளின் அவதாரமாக நினைத்துக் கொண்டால் அவருக்கு சிறப்பு சிகிச்சைத் தேவைப்படுகிறது என்று அர்த்தம். இங்கு மனிதாபிமானம் மட்டும் தான் சிறந்தது. இதைத் தவிர மற்றவை முக்கியமானதோ அல்லது சிறப்பு வாய்ந்ததோ கிடையாது. இங்கு நான் ஒருவரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசவில்லை.
தங்களுடைய தொழிலில் வெற்றிகரமான மக்கள் என்று நினைத்துக் கொள்பவர்களை தாக்கும் நோய். அவர்களைக் கவனித்து முடிந்த உதவிகளை செய்யுங்கள்’ என்று கூறினார்.
இவர் பிரதமர் மோடியைத் தான் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார் என இவருடைய இந்தப் பதிவு வைரலானதும், அவர் அதை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.