காயமுற்ற கரத்துடன் கேன்ஸ் சிவப்புக் கம்பளத்தில் கிறங்கடித்த ஐஸ்வர்யா ராய்... மகளுடன் மும்பை திரும்பினார்


மும்பை விமான நிலையத்தில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா பச்சன்

77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுவிட்டு, நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதுமிருந்து திரை நட்சத்திரங்கள் வித்தியாசமான உடைகளில் அணிவகுக்கின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14ம் தேதி துவங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரத்யேக உடைகள் அணிந்து ஒய்யாரமாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.

அவருடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் உடனிருந்தார். இந்த முறை ஐஸ்வர்யா ராய் கையில் மாவுக்கட்டு போட்டிருந்தது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைய வைத்தது.

கட்டுப் போட்டிருந்த நிலையிலும் தனது மகளுடன் கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றதை அவரது ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேன்ஸ் விழாவை முடித்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயும், ஆராத்யா பச்சனும் நேற்று மும்பையை வந்தடைந்தனர். விமான நிலையத்திலிருந்து இருவரும் வெளியே செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ஆராத்யா, காயமடைந்த நிலையில் உள்ள தனது தாயை விட்டு விலகாமல் அரவணைப்புடன் சிரித்துக்கொண்டே காரில் ஏறி செல்வதாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

x