’தனி மனிதரின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள், காயப்படுத்தாதீர்கள்’ என நடிகர் ஜி.வி. பிரகாஷ் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இவர் பின்னணிப் பாடகி சைந்தவியை பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 11 வருடங்கள் திருமண வாழ்வில் இருந்த இந்த ஜோடிக்கு அன்வி என்ற நான்கு வயது மகளும் இருக்கிறார். இப்படியான சூழலில்தான் இருவரும் நேற்று முன்தினம் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாகக் கூறினர்.
இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இவர்கள் பிரிவுக்கு காரணங்களாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்தது, சைந்தவியின் அம்மா- ஜி.வி.பிரகாஷ் கருத்து வேறுபாடு, தனுஷூடனான நட்பு எனப் பல காரணங்கள் இணையவெளியில் உலா வந்தது. மேலும், ரஹ்மான் உள்ளிட்ட நெருக்கமான சொந்தங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுமே இவர்கள் விவாகரத்து முடிவில் தெளிவாக இருந்தார்கள் என்றும் பலவாறு செய்திகளும் வந்தன.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார். " புரிதலும் போதுமான விவரங்களும் இல்லாமல் அனுமானத்தின் பெயர் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியியல் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்தது தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்த சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒருவரின் தனிநபரின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா?
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியும் காரணங்களையும் என்னுடன் நெருங்கி, பழகிய நண்பர்கள் உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.
எங்களைப் பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு தனிமனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" என நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.