நேற்றிரவு பாடகர் வேல்முருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான வேகத்திலேயே ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்.
மதுபோதையில் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதற்காக பாடகர் வேல்முருகன் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வேகத்திலேயே, உடனே ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக தடுப்பு அமைத்து வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மெட்ரோ ரயில் உதவி மேலாளர் வடிவேல் தலைமையிலான ஊழியர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மதுபோதையில் காரில் வந்த சினிமா பாடகர் வேல்முருகன் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் எந்த வித முன்னறிவிப்பு இன்றி திடீரென ஒருவழிப்பாதையாக மாற்றியது குறித்து கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் உதவி மேலாளர் வடிவேலுக்கும், பாடகர் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் உதவி மேலாளரை, வேல்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வடிவேல் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு வேல்முருகனை கைது செய்தனர்.
பின்னர் போலீஸார் பாடகர் வேல்முருகனை எச்சரித்து, கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். ஏற்கனவே, வேல்முருகன் இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் மதுபோதையில் விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.