சூர்யாவுடன் ரெண்டு படமாவது நடிக்காமல் விடமாட்டேன்..!


ஆத்யா பிரசாத்

நயன்தாராவும் குஞ்சாக்கோ கோபனும் ஜோடி சேர்ந்து நடித்த ‘நிழல்’ என்ற மலையாளப் படம், 2021-ல் வெளியானது. அதில் மேகா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ஆத்யா பிரசாத்.

அவ்வளவுதான்! ‘இந்தப் பெண் நம்ம ரசனைக்கு ஏற்ற தோற்றத்துடன் இருக்கிறாரே’ என்று தமிழ் சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள அந்தப் படத்தில் மிக முக்கியமான வேடம் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு. அவரிடம் கதாநாயகியைத் தேர்வு செய்து தரும்படி தனது குரு என்கிற முறையில் உரிமையுடன் கேட்டார் கே.விவேக். அப்போதுதான் “கொஞ்சமும் யோசிக்காம ஆத்யாவை ஃபிக்ஸ் பண்ணிக்க” என்றார் மேனன். அப்படி ஆத்யா தமிழில் நேரடியாக அறிமுகமாகும் ‘13’ வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.

இதற்கிடையில் மலையாளத்தில் வரிசையாக 4 படங்களில் நடித்து முடித்துவிட்ட ஆத்யாவுக்கு, நயன்தாரா வழியில் எப்படியாவது தமிழ் சினிமாவில் தடம்பதிக்க வேண்டும் என்று ஆசை. அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரை பிரபல மலையாளத் தொலைக்காட்சி அண்மையில் பேட்டி எடுத்தது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ”உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?” அதற்கு ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆத்யா சொன்ன பதில் “சூர்யா”.

ஆத்யா பிரசாத்

அது மட்டுமல்ல... தொடர்ந்து அவர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்போது “பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து எனக்கு சூர்யா மீது கிரெஷ். அவரது அழகு, நடிப்பு, நடிப்புக்கான அர்ப்பணிப்பு அனைத்தின் மீதும் கிரெஷ். அவருடன் 2 படங்களாவது நடிக்காமல் விடமாட்டேன்” என்றார்.

அந்தப் பேட்டிக்குப் பிறகு மலையாள ரசிகர்கள், ”ஏன் உனக்கு மம்மூட்டி, மோகன் லால், டோவினோ தாமஸ் மாதிரி நம்ம சினிமா ஹீரோக்களைப் பிடிக்காதா?” என்று ட்ரோல் செய்யவில்லை. அங்கே அவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் ஆடியன்ஸ்!

ஆத்யா பிரசாத்

ஆத்யா பற்றிய லேட்டஸ்ட் செய்தி, துரை சரவணன் என்பவர் இயக்கத்தில் கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆத்யா. அவருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம் என்றுதானே நினைக்கிறீர்கள்! அதுதான் இல்லை. ஆர்யன் ஷ்யாம் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் ‘அந்த நாள்’ என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்துவிட்டார். இந்தப் படங்களின் வெளியீட்டுக் காகக் காத்திருக்கிறார் இந்த கௌதம் மேனனின் சாய்ஸ்!

x