பொறுமை இழந்த லிங்குசாமி... கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!


நடிகர் கமல்ஹாசன்

’நடிகர் கமல்ஹாசன் கால்ஷீட் தருவதாக உத்திரவாதம் கொடுத்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கால்ஷீட் தராமல் இருக்கிறார். அதனால், அவரிடம் இருந்து கால்ஷீட் பெற்றுத் தர வேண்டும்’ என இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளது.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘உத்தம வில்லன்’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார். ஆனால், படம் வெளியாகி அந்த சமயத்தில் தோல்வியைத் தழுவி தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ரூ. 50 கோடியில் ஒரு படத்தை தயாரித்துக் கொடுப்பதாக முதல் பிரதி அடிப்படையில் அந்தப் படத்துக்கு திருப்பதி பிரதர்ஸூடன் ஒப்பந்தம் போட்டார் கமல்.

ஆனால், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு விருப்பமில்லாத கதையை கட்டாயப்படுத்தி ’உத்தம வில்லன்’ படமாக எடுத்ததுடன் நஷ்டம் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார் கமல். தயாரிப்பாளராக படத்தைப் பார்த்துவிட்டு இறுதியில் தாங்கள் சொன்ன கரெக்‌ஷனை நடிகர் கமல்ஹாசன் செய்திருந்தால் ஒருவேளை படம் ஹிட்டாகியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என முன்பொரு பேட்டியில் இயக்குநர் லிங்குசாமி சொல்லி இருந்தார்.

நடிகர் கமல்ஹாசன்- லிங்குசாமி

மேலும், இந்தப் படம் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட திருப்பதி பிரதர்ஸூக்கு 30 கோடியில் இன்னொரு படம் நடித்துத் தருவேன் என்றும் கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உத்திரவாதக் கடிதம் அளித்தார். ஆனால், ‘உத்தம வில்லன்’ வெளியாகி 9 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல் கால்ஷீட் தரவில்லை.

இதனால், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கமலிடம் தாங்கள் ‘த்ரிஷ்யம்’ படத்தை ரீமேக் செய்யலாம் என்று சொல்லியதாகவும் ஆனால், அதில் விருப்பமில்லாமல் கமல் மறுத்துவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள். தங்களிடம் மறுத்த ஓரிரு வாரங்களிலேயே அதே படத்திற்காக இன்னொரு தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார் கமல் என்பதையும் கூறியிருக்கிறார்கள்.

’உத்தம வில்லன்’

மேலும், உத்தம வில்லன் வெளியீட்டுக்கு தங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருப்பதால் கமல் உத்திரவாதம் அளித்தபடி அவரிடம் படத்திற்கான கால்ஷீட்டை வாங்கித் தரும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x