கவிஞர் வைரமுத்து உயர்ந்ததற்கு நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம்... கங்கை அமரன் பதிலடி!


கங்கை அமரன், இளையராஜா

வைரமுத்து உயர்ந்ததற்கு தாங்கள் போட்ட பிச்சைதான் காரணம் என இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில்,’ தனது இசை தான் பெரியது என்றும் இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம்’ என்றும் கூறி காப்புரிமை வழக்கு ஒன்றை இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார்.

தனது திரைப் பாடல்களை ஒளிபரப்புவதற்கு பெறப்பட்ட அனுமதிக்காலத்தைத் தாண்டியும், எக்கோ நிறுவனம் பாடல்களை ஒளிபரப்பி வருவதாக அவர் இந்த வழக்கை தொடுத்து இருந்தார். இந்த வழக்கின்போது இளையராஜா முன்வைத்த பல்வேறு கருத்துக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கவிஞர் வைரமுத்து

இது தொடர்பாக திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து சமீபத்தில் எக்ஸ் தள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, படிக்காத பக்கங்கள் என்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என பேசியிருந்தது பெரும் பேசு பொருளானது. பாடலாசிரியரும் பாடல்களுக்குச் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதனை மேற்கோள் காட்டி வைரமுத்து இந்த கருத்தை பேசியிருந்தார்.

கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்து இளையராஜாவை நேரடியாக தாக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இளையராஜா - வைரமுத்து

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விமர்சித்து உள்ள அவர், ”வைரமுத்து இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணமே நாங்கள் போட்ட பிச்சைதான். இல்லையென்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகியிருக்க மாட்டார். ஒரு நிலத்தை கொடுத்து இந்தாப்பா வச்சுக்கோ என இளையராஜா தனது இசையை கொடுக்க, அதில் வந்து அமர்ந்து கொண்டு அந்த நிலம் உருவானது என்னால் தான் என மடத்தனமாக கூறுகிறார் வைரமுத்து. வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான். ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது. அவருக்கு கொஞ்சமும் நன்றி உணர்வு இருந்திருந்தால், இப்படி இளையராஜா குறித்து தவறாக பேசியிருக்க மாட்டார். பாடல் பெரியதா, இசை பெரியதா என்று கேட்டிருக்க மாட்டார். “என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், ” ’இது ஒரு பொன் மாலை பொழுது’ பாடலுக்கு இளையராஜா டியூன் போட்டுக் கொடுத்த நிலையில், அதற்கு வரிகளை வைரமுத்து எழுதிக் கொடுத்தார். பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது என சினிமா வாய்ப்பை இளையராஜா தான் கொடுத்தார். அப்படி கொடுக்காமல் விட்டிருந்தால், இந்நேரம் வைரமுத்து என்பவர் யார் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.” என்றும் விமர்சித்துள்ளார். கங்கை அமரனின் இந்த நேரடியான கருத்து திரைத் துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x