ஆடியன்ஸ் என்னை செல்ஃபி மழையில் நனைக்கிறார்கள்!


நிகிதா கிருஷ்

குறும்படம் வழியாக அறிமுகமாகி, ‘ஒரு நொடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி யிருக்கிறார் நிகிதா கிருஷ். தமிழ்ப் பெண்ணான இவருக்கு அறிமுகப்படத்திலேயே அற்புதமான கதாபாத்திரம் அமைய, அதைத் தேர்ந்த நடிகரைப் போல் நடித்து உயிரூட்டியிருக்கிறார். இது அவருடைய முதல் பேட்டி:

நிகிதா கிருஷ்

உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்...

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. அங்கே +2 வரை படித்தேன். அப்பாவின் பிசினஸ் சென்னையில் இருக்கிறது. +2வுக்குப் பிறகு சென்னையில் பி.ஜி. டிப்ளமோவில் கிராஃபிக் டிசைன் படித்தேன். எனக்கு சினிமாவில் வர வேண்டும் என்பதுதான் சின்ன வயது முதல் விருப்பமாக இருந்தது. அதற்கு எனது பாட்டி காரணமாக இருந்தார்.

டிசைன் இன்ஸ்டியூட்டில் படித்தபோது ‘அகத்தியன்’ என்கிற குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதில் நான் இயல்பாக நடித்திருந்ததாக அதைப் பார்த்த உறவினர்களும் நண்பர்களும் சொன்னார்கள். நமது முகத்துக்காகச் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், யூடியூப் கமென்டில் ஏகப்பட்ட பாராட்டுகள். அப்போது தான் சினிமாவில் தைரியமாக இறங்கலாம் என்கிற நம்பிக்கை வந்தது. இந்த சமயத்தில் தான் ‘ஒரு நொடி’ படத்துக்கான வாய்ப்பு அமைந்தது. முதல் படமே இவ்வளவு சிறந்த படமாகவும் எனக்கு முக்கிய கதாபாத்திரமும் அமையும் என்று நான் நினைக்கவில்லை.

அறிமுக இயக்குநர், அறிமுகத் தயாரிப்பாளர் இணைந்து ஒரு படம் செய்யும்போது அதில் கதையைக் கேட்டுத்தான் நடிப்பேன் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு இயக்குநர் கதையைச் சொன்னாரா?

நிகிதா கிருஷ்

திரைக்கதையில் எனது கதையும் எம்.எஸ்.பாஸ்கர் சாரின் கதையும் ஒரு புள்ளியில் வந்து இணையும். பார்வதி என்கிற நடுத்தரக் குடும்பத்துப் பெண். பிரபல நகைக்கடையில் சேல்ஸ் கேர்ளாக வேலை செய்யும் ஒரு பெண் என்றாலும் கேட்கும்போதே எனக்கு அந்தக் கதாபாத்திரத்துடன் நான் கனெக்ட் ஆனேன்.

இந்த உணர்வுதானே படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும் என்று நினைத்தேன். பார்வதியின் காதல், அவளது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி இந்தக் கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்களைப் பாதிக்கின்றன என்று கதை செல்கிறது. அப்படியிருக்கும்போது இயக்குநர் எனக்குச் சொல்லாமல் எப்படிப் படமாக்க முடியும்?

மணிவர்மா சார் தொடக்கத்திலேயே கதையில் நான் எப்படிப்பட்ட உணர்வை உருவாக்க வேண்டும் என்று எனது கதாபாத்திரம் பற்றி விரிவாகச் சொல்லிவிட்டார். “தமிழ் நாட்டில் உள்ள மிடில் கிளாஸ் பெற்றோர்கள் அனைவரும் உன்னைத் தனது மகள் போல் நினைக்கும்படி உனது நடிப்பு இருக்க வேண்டும்” என்றார்.

நிகிதா கிருஷ்

இப்போது படம் வெளியாகியிருக்கும் திரையரங்குகளைச் சுற்றி வருகிறோம். எல்லோரும் “எங்க வீட்டுப் பெண் மாதிரி; இருக்கே ஜாக்கிரதையா இரு” என்று சொல்லிக் கைகொடுத்து என் மீது அக்கறை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். என் வயதுடைய ஆடியன்ஸ் என்னை செல்ஃபி மழையில் நனைக்கிறார்கள்.

கொலை செய்யப்படும் காட்சியில் நடிப்பது சிரமமாக இருந்ததா?

ஆமாம்! ரொம்பவே கஷ்டப்பட்டேன். கொலை நடக்கும் தென்னந்தோப்பு, பல வருடங்களாகச் சுத்தம் செய்யப்படாமல் அப்படியே கல்லும் முள்ளுமாகக் கிடந்தது. அதில் அப்படியே என்னைக் கொலை செய்பவரின் வேகத்துக்கும் செய்கைகளுக்கும் ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். “நிஜமாகவே அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ளப் போராடுங்கள். மூச்சுவிடாமல் தம் கட்டிக்கொள்ளுங்கள். மூச்சு விட முடியாமல் ரொம்மக் கஷ்டப்பட்டால் மட்டும் உதவி தேவை என்று கத்துங்கள்” என இயக்குநர் சொன்னார்.

நிகிதா கிருஷ்

என்னைக் கொல்பவர் என்னைக் கீழே தள்ளியபோது முள்ளும் கண்ணாடிச் சில்லுகளும் குத்தியதில் வலியை வெளியே காட்டாமல் பொறுத்துக்கொண்டு நடித்தேன். மூச்சு முட்டிக்கொண்டு மயக்கம் வந்துவிட்டது. ஆனால், காட்சி இயக்குநர் எதிர்பார்த்தபடி வரவேண்டுமே எனப் பொறுத்துக்கொண்டேன். எதிர்பார்த்ததைவிட இயல்பாகவும் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் வந்துவிட்டதாக இயக்குநர் மணிவர்மா சொன்னார். இப்போது படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களும் சொல்கிறார்கள். இந்தக் காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆகிவிட்டது.

இந்தப் படத்தில் நீங்கள் விரும்பி நடித்த காட்சி..?

நான் நடித்த காட்சிகளில் காதல் காட்சிகளில் மிகவும் விரும்பி நடித்தேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது படம் பார்த்தவர்களுக்குப் புரியும். காதல் என்றாலே ரொம்பவும் பேத்தலாகக் காட்சிகள் இருக்கும் படங்களைப் பார்த்து நானே நக்கல் செய்து சிரித்திருக்கிறேன். ”நிஜத்துல இப்படியா லவ் பண்ணுவாங்க” என்று கிண்டல் செய்வோம் இல்லையா... அப்படி இல்லாமல் இந்தப் படத்தில் எனது காதலர் ஜீவாவாக நடித்துள்ள அருண் கார்த்திக்கும் எனக்குமான காட்சிகள் அவ்வளவு யதார்த்தமாக அமைத்திருந்தார் மணிவர்மா. அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, “அப்படியே கேரக்டராகவே இருங்கள்...” என்று சொல்லி காதல் காட்சிகளை மட்டுமே 10 நாட்களுக்கு மேல் படமாக்கினார்.

உங்களுடைய சாயல் ‘96’ பட நாயகிகளில் ஒருவரான கௌரி கிஷன் போல இருக்கிறது என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?

நான் 10 வகுப்பு படிக்கும்போது ’96’ படம் ரிலீஸ் ஆனது. அப்போதே என்னைப் பார்க்கும் பலரும் “நீங்கள் கௌரி கிஷனா?” என்று கேட்டிருக் கிறார்கள். சென்னைக்கு வந்ததும் இப்போதும் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். பலர், “நீங்கள் அவருடைய தங்கையா?” என்றும் கேட்டார்கள்.

நிகிதா கிருஷ்

உங்கள் பாட்டிதான் உங்களுக்கு சினிமா ஆர்வத்தைத் தூண்டினார் என்று சொன்னீர்கள்..?

ஆமாம்... எனது அம்மாவின் அம்மா. பாட்டியின் பெயர் கஸ்தூரி. எப்போதும் டிவியில் பழைய கருப்பு - வெள்ளைப் படங்களைப் பார்ப்பார். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் என்னையும் அழைத்து உட்கார வைத்துக்கொண்டு, ”பத்மினியின் நடிப்பைப் பார்... சாவித்திரி எப்படி நடிக்கிறார் பார்... விஜயகுமாரி எப்படிக் கண்ணை உருட்டி நடிக்கிறார் பார்... தேவிகா காதல் காட்சியில் எப்படி நடிக்கிறார் பார்?” என்று எல்லா விண்டேஜ் ஹீரோயின்களின் நடிப்பையும் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிவிட்டார். கருப்பு - வெள்ளைப் படங்களைப் பாட்டியுடன் உட்கார்ந்து முழு மூச்சாகப் பார்த்ததுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வரக் காரணம்.

x