திரை விமர்சனம்: பிடி சார்


நமக்கெதற்கு வம்பு என ஒதுங்கிப் போகும் கனகவேல் (ஹிப்ஹாப் தமிழா ஆதி), தனியார்ப் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியர். எதிர்வீட்டுப் பெண் நந்தினி (அனிகா), சிலரால்பாலியல் ரீதியாகச் சீண்டப்படுகிறார். அவர்களே அதைக் காணொலியாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, நந்தினியின் தெருவாசிகள், ஊர்க்காரர்கள், இணையவாசிகள் என அவள் மீதே அவதூறு பேசுகிறார்கள். இதில் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறாள். ஆனால், ‘அது கொலை’ என்று புகார் அளிக்கும் கனகவேல், அதை நிரூபிக்கக் களமிறங்குகிறார். அதில் வென்றாரா இல்லையா? என்பது கதை.

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை முதன்மைப்படுத்தியிருந்தாலும், பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பெண் சமூகத்தின் தீனமான குரலை ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவப் படுத்தியிருப்பது கதையுடன் உடனடியாக ஒன்ற வைக்கிறது. தான் பணிபுரியும் பள்ளியில் ‘மேஜிக் வால்’ என்கிற ஒன்றை உருவாக்கி, அதில் மாணவ, மாணவிகளின் மனக் குமுறலை எழுதி வைக்கச் சொல்லிப் பாராட்டுப் பெறுகிறார் கனகவேல். அப்போதே இவர் பெரிதாகச் செய்யப் போகிறார் என்பதை உணர்த்தும் திரைக்கதை, அவர் அப்படி என்ன செய்யப் போகிறார் என்பதைக் கடைசிவரை ஊகிக்க முடியாத காட்சிகளுடன் நகர்ந்து செல்கிறது.

யாருக்கோ நடப்பது நமது பிரச்சினை அல்ல என்று விலகிச் செல்வது ஆண்மையுமல்ல; பெண்மையுமல்ல என்பதை நிறுவ, கனகவேலிடம் அவனது தங்கை பல் துலக்கும் பிரெஷ்சை நீட்டிக் கேள்வி கேட்கிற காட்சி, தவறு செய்த ஆட்டோ ஓட்டுநரை கனகவேல் தாக்கும்போது ‘அடி வாங்குகிறவனை மாதிரி என் மகன் வந்திடக் கூடாது’ என்று இளம் தாய் சொல்லும் காட்சி என அர்த்தப்பூர்வமான பல காட்சிகளின் வழியே படம் நெடுகிலும் உரையாடிக்கொண்டே வருகிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்.

அதேநேரம், சமூக மனநிலையில் மாற்றம் கோரும் படத்தில் பகுத்தறிவுக்கு எதிர்நிலையில் நிற்கும் ஜோதிடம் மீதான நம்பிக்கையைத் தூக்கிப் பிடித்திருப்பது, நகைச்சுவை என்ற போர்வையில் ஆசிரியர் - மாணவர் இடையில் ‘கிரெஷ்’ எனச் சித்திரித்திருப்பது போன்ற ‘பூமர்’களைத் தவிர்த்திருக்கலாம்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி, கனகவேலாக துடுக்கு கலந்த தனது கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை திறமையாக ‘சேஞ்ச் ஓவர்’ செய்து நடித்திருக்கிறார். அவரது இசையில் ஒலிக்கும் பாடல்களும் பின்னணி இசையும் தரம். நந்தினியாக வரும் அனிகா, கல்வித் தந்தையாக வரும் தியாகராஜன், நந்தினியின் அப்பாவாக வரும் இளவரசு, நீதிபதி பாக்யராஜ், வழக்கறிஞர்கள் பிரபு - மதுவந்தி, கனகவேலின் அம்மா தேவதர்ஷினி என நட்சத்திர நடிகர்கள் பலரையும் கதாபாத்திரங்களாக உணர வைத்துவிடுகிறது கதை நகர்வின் தீவிரம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் கதைக் களத்தைக் கையிலெடுத்திருந்தாலும் அதைப் பொறுப்புடன் கையாண்டு, ஒடுக்கப்படும்போது நேர்படப் பேச வேண்டும் என கற்றுக் கொடுக்கிறார் இந்த நேர்த்தியான வாத்தியார்.

x