கான் விழா: பாயல் கபாடியா படத்துக்கு கிராண்ட் பிரி விருது


கான்: பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்றது. இதில் இந்திய இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' படம், பாம் டி ஓர் விருதுக்கு போட்டியிட்டது. இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதுக்குப் போட்டியிட்ட முதல் திரைப்படம் இது.

இந்நிலையில் இந்த விழாவின் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரி’ விருதை இந்தப் படம் வென்றுள்ளது. மும்பையில் வசிக்கும் 2 கேரள செவிலியர்கள் பற்றிய கதையை கொண்ட இந்தப் படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையிட்டு முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று 8 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

விருதைப் பெற்றுக் கொண்ட இயக்குநர் பாயல் கபாடியா பேசும்போது, ‘அடுத்த இந்திய படம் விருது பெறுவதற்கு இன்னொரு 30 ஆண்டுகள் காத்திருக்கக் கூடாது’ என்றார். விருதுபெற்ற கபாடியாவுக்கு இந்திய பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அனசுயா சென்குப்தா: இதற்கிடையே, பல்கேரியாவை சேர்ந்த கான்ஸ்டான்டின் போஜநோவ் இயக்கிய ‘தி ஷேம்லஸ்’ என்ற படத்தில் நடித்ததற்காக, இந்திய நடிகை அனசுயா சென்குப்தாவுக்கு கான் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் கான் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சந்தோஷ் சிவனுக்கு விருது: இந்தப் பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக வழங்கப்படும், பியர் ஆஞ்சனியு (Pierre Angenieux) விருது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற சந்தோஷ் சிவனுக்கு வாழ்த்துகள் குவிகிறது.

x