இயக்குநர் பாலா நீண்ட காலமாக இயக்கி வந்த ‘வணங்கான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடித்தார். பின்பு அவர் அதிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு அருண் விஜய் நாயகனாக வந்த்தார். ஹீரோ மாறியது மட்டுமல்ல... படத்தின் இரண்டு ஹீரோயின்களும் மாறினார்கள். பாலாவிடம் அடிவாங்கிபின் சொந்த ஊரான கோட்டயத்துக்குச் சொல்லாமல் கொல்லாமல் ஓடினார் ஒரு ஹீரோயின். அவர், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரெபல்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல மலையாள ஹீரோயின் மமிதா பைஜு.
ஆனால், மமிதாவுக்கு முன்பே ‘வணங்கான்’ படத்துக்கு தேர்வானார் கீர்த்தி ஷெட்டி. அனுஷ்கா ஷெட்டிதான் ஆந்திரக் கதாநாயகிகளிலேயே அசத்தல் அழகு என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடி ஆக்கிய 2கே கிட் கீர்த்தி ஷெட்டி. அவரைத்தான் முதலில் பாலா தேர்வு செய்தார். அவரும் சூர்யா ஜோடியாக நடிப்பதால் சந்தோஷமாகவே ஒப்புக்கொண்டார். ஆனால், பாலாவிடம் அடி நிச்சயம் என்பதைக் கேள்விப்பட்டதும் இப்போதைக்குத் தமிழ்ப் படம் வேண்டாம் என்று ஆந்திராவிலேயே தங்கிவிட்டார்.
அதன்பிறகு கீர்த்தி விஜய்சேதுபதியின் மகளாக நடித்த ‘உப்பண்ணா’ தெலுங்குப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. நானியுடன் நடித்த ‘ஷியாம் சிங்க ராய்’ படத்தில் கீர்த்தியின் அழகை ரசிகர்கள் சிலாகிக்கப் போய், லிங்குசாமி தனது ‘தி வாரியர்’ படத்தின் தெலுங்கு, தமிழ் வெர்சன்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தின் புல்லட் சாங் மூலமாக தமிழில் ஹிட்டானார் கீர்த்தி ஷெட்டி.
இப்போது தனது தாய்மொழிப் படவுலகையே மறக்கும் அளவுக்குக் கீர்த்தியின் கையில் தமிழ், மலையாளப் படங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஜெயம் ரவி ஜோடியாக அவர் நடித்துள்ள ‘ஜீனி’ ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அதில் கீர்த்திக்கு அம்மா தேவயானி! அதைவிட அதிரடியான அடுத்தப் படம் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’. இதில் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி.
அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் கைகோத்திருக்கிறார் கீர்த்தி. இந்த மூன்று படங்களும் ரிலீஸ் ஆகும்போது தமிழில் பல கதாநாயகிகள் காணாமல் போய்விடுவார்கள் என்கிறார்கள். தமிழில் பெரும் படையெடுப்பு நடத்தியிருப்பது போதாதென்று, மலையாளத்தின் சென்சேஷனல் ஸ்டார் டோவினோ தாமஸ் ஜோடியாக ஜிதின் லால் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ என்ற எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டார் கீர்த்தி.
இங்கே இவன் இத்தனை பிஸியாக இருப்பதால் ‘உப்பண்ணா’ கீர்த்தி எங்கே என்று ஆந்திரப் படவுலகில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!