ரத்தமும் சதையுமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பதில் என்ன சங்கடம்?


நிரஞ்சனா நெய்தியார்

மில்லியன்களில் ஹிட் அடித்த ஜாலியான வீடியோக்களில், சாமானியத் தமிழ்ப் பெண் கதாபாத்திரங்களில் நிரஞ்சனா நெய்தியாரைப் பார்க்கலாம். யூடியூபில் கிடைத்த புகழ் வெளிச்சத்தின் வழியாக ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர். தற்போது, ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ என்கிற சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று தரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். முதல் படமே வெற்றிமுகம் தந்திருப்பதால் உற்சாகத் துள்ளலில் இருந்த அவரிடம் காமதேனுவுக்காக உரையாடியதிலிருந்து ஒருபகுதி...

உங்களைப் பற்றி காமதேனு வாசகர்களுக்கு ஓர் அறிமுகம் தரலாமா?

எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு. தாய்மொழி மலையாளம். நான் வளர்ந்தது, +2 வரைக்கும் ஸ்கூல் படித்தது எல்லாமே கோயமுத்தூர். அதனால் தமிழ் நன்றாகவே பேசுவேன். தமிழில் எழுத, படிக்கவும் தெரியும். சிறு வயது முதல் மலையாளப் படங்களை விட அதிகமாகத் தமிழ்ப் படங்களைப் பார்த்தே வளர்ந்திருக்கிறேன்.

நிரஞ்சனா நெய்தியார்

கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து பிடெக் பயோ டெக்னாலஜி படித்தேன். அதை முடித்த பிறகு சென்னையிலேயே தங்கி சின்னத்திரை, சினிமாவில் நடித்து வருகிறேன். அப்பா, அம்மா, தம்பி கோயமுத்தூரிலேயே இருக்கிறார்கள். அப்பா பிசினஸ்மேன். அம்மா ஹவுஸ் வைஃப் தம்பி ஸ்கூல் படிக்கிறான்.

சின்னத்திரை வழியாக சினிமாவுக்கு வந்து ஜெயிப்பவர்கள் இருந்தாலும் தற்போது யூடியூபில் பிரபலமாகி சினிமாவுக்கு வருவதும் பிரபலமாகியிருக்கிறது. நீங்கள் யூடியூப் பிரபலம் ஆன பின்னணியைக் கொஞ்சம் பகிருங்கள்...

கல்லூரியில் படிக்கும்போதே யூடியூப் வீடியோக்கள் செய்யத் தொடங்கினேன். அதில் ஆரம்பித்த ஆர்வம்தான் என்னைச் சின்னத் திரைக்கும் பிறகு சினிமாவுக்கும் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது. யூடியூப் வீடியோக்கள் கொண்டுவந்த பெயர் வழியாக ஜீ தமிழில் ‘வித்யா நம்பர் 1’ என்கிற தொடரில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

நிரஞ்சனா நெய்தியார்

கடந்த ஒரு வருடமாக அந்தத் தொடர் வெற்றிகரமாக வந்துகொண்டிருக்கிறது. யூடியூபா, சின்னத்திரையா நாம் எங்கிருந்து வருகிறோம் என்றெல்லாம் ஆடியன்ஸ் பார்ப்பதில்லை. யூடியூப் என்றால் நல்ல கன்டென்ட் கொடுக்கிறோமா என்று பார்க்கிறார்கள். சின்னத் திரை என்றால் எப்படி நடிக்கிறார் என்று பார்க்கிறார்கள்.

சினிமாவும் அப்படித்தான். நாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் எனது நடிப்பு பாலிசி. என்னுடைய அனுபவத்தில் சின்னத்திரை - சினிமா இரண்டையும் நன்றாகவே பேலன்ஸ் செய்து செல்லமுடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அப்படியே தொடர்வேன்.

யூடியூப் ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள்... அங்கே அத்தனை எளிதில் அனைவருக்கும் ஆதரவு கிடைத்துவிடுவதில்லை. அங்கே நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?

நிரஞ்சனா நெய்தியார்

கள யதார்த்தம் என்னவென்றால், யூடியூப், சின்னத்திரை, சினிமா மூன்றுக்கும் வெவ்வேறுவிதமான நடிப்புமுறை தேவைப்படுகிறது. காரணம், மூன்றிலும் கன்டென்ட் வேலை செய்யும் விதம், எவ்வளவு ஆடியன்ஸை, எப்படிப்பட்ட ஆடியன்ஸை போய் சேருகிறது என்பதெல்லாம் முற்றிலும் மாறுபடுகிறது.

என்னோட யூடியூப் அனுபவத்தைப் பொறுத்தவரைக்கும் அங்கே சீரியஸ் வீடியோக்களுக்கு அவ்வளவாக வியூஸ் வராது. நானும் என்னோட நண்பர்கள், தோழிகள் இணைந்து ரொம்ப ஜாலியான, கேஸுவலான வீடியோக்களில் பங்குபெற்றோம். அவை எல்லாமே வைரல் ஆனது. போன் வழியாகப் பார்க்கிற யூடியூப் வீடியோக்கள் எல்லாமே ஜாலியான மூடை கொடுக்கிறதாக இருக்கவேண்டும். அதுமாதிரியான வீடியோக்களை கொடுக்கிற வரைக்கும் அவர்களுக்குப் பிடிக்கும். இதுதான் நான் அங்கே கற்றுக்கொண்டது.

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தில் நீங்கள் ஏற்று நடித்துள்ள ஷகீரா கதாபாத்திரம் மிகுந்த சர்ச்சையை உருவாக்கும் என்று தெரிந்தும் அதில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த கணத்தில் உங்களுடைய பெற்றோரும் நண்பர்களும் என்ன சொன்னார்கள்?

என் பெற்றோருக்கும் நண்பர்கள், தோழிகளுக்கும் என் மீது அக்கறை இருக்கும் அல்லவா? ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அந்தப் படத்தின் கதை தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தார்கள். “அவசரப்படாமல் யோசித்து முடிவு செய். ஆரம்பமே இப்படிச் சர்ச்சையுடன் தொடங்க வேண்டுமா?” என்று கவலைப்பட்டவர்கள், “இறுதி முடிவை உன்னிடமே விட்டுவிடுகிறோம்” என்றார்கள்.

நிரஞ்சனா நெய்தியார்

நான் என்ன நினைத்தேன் என்றால், எந்த மொழிப் படமாக இருந்தாலும் இதுபோன்ற கதைகள் எப்போதாவதுதான் எடுக்கப்படுகின்றன. இப்படியொரு படம் எடுக்கப்பட முதலில், சமூகத்துக்கு நம்மால் முடிந்த நல்ல கதைகளைக் கூற வேண்டும் என்று நினைக்கும் கதாசிரியரும் இயக்குநரும் வரவேண்டும். அதைத் தயாரிக்க நல்லெண்ணம் கொண்ட தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். அப்படி அவர்கள் ஒன்று கூடி, பொருத்தமான நடிகர்கள் அமைந்து, சிறந்த படைப்பாக அது உருவானதும் மக்கள் பார்வைக்கு வரவேண்டும். இத்தனையும் இந்தப் படத்தின் விஷயத்தில் நடக்கும்போது, யாருக்குமே கிடைக்காத அந்த நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கும்போது அதைத் தவறவிடக் கூடாது என்று முடிவு செய்தேன்; ஏற்று நடித்தேன். இப்போது பாராட்டுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

படத்தில் நடிப்பதற்கு முன் எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள என்ன முயற்சியெல்லாம் எடுத்தீர்கள்?

நான் சென்னையில் படித்ததால் தன்பாலினச் சமூகம் குறித்து ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் படித்த கல்லூரியிலும் சரி, அதன்பிறகு பணி வாழ்க்கையிலும் சரி, எனக்குப் பரிச்சயமான பலர் எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினராக இருக்கிறார்கள். இந்தப் படத்தை எழுதி இயக்கிய ஜெயராஜ் பழனி சாரின் நண்பர்களுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் உண்மைக் கதைதான் இது.

நிரஞ்சனா நெய்தியார்

எனது நண்பர்கள் பட்டியலில் இருந்த தன்பாலினத்தவர், இயக்குநரின் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் தன்பாலினத்தவர்களை அழைத்து இந்தப் படத்தை ப்ரிமியர் காட்சியை சாமானிய பொதுமக்களுடன் பார்க்க வைத்தோம். படம் பார்த்த பொதுமக்கள் புரிந்துகொண்டு பாராட்டியதைப் பார்த்து கலந்துகொண்ட தன்பாலினத்தவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நிரஞ்சனா நெய்தியார்

படத்தில் இடம்பெற்ற தன்பாலின முத்தக்காட்சியில் நடித்தபோது சங்கடமாக உணர்ந்தீர்களா?

நிச்சயமாக இல்லை. நான் ஒரு ஏலியனுக்கு முத்தம் கொடுக்கவில்லை. அன்பாக வளர்க்கும் பெட் அனிமல்களுக்கே முத்தம் கொடுக்கிறோம். ரத்தமும் சதையுமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பதில் என்ன சங்கடம்? அதுவுமில்லாமல், இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை டெலிவர் செய்வதுதானே ஒரு நல்ல நடிகரின் கடமை. அதைத்தான் நான் செய்தேன். நல்ல கதாபாத்திரம் என்றால் அது எவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் என்னால் ஏற்று நடிக்க முடியும் என்று காட்டியிருக்கிறேன்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

x