நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடித்து வருகிறது. இந்தப் படத்திற்கு ‘பாஸ், ஃபஸூல்’ என டைட்டில் வைக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால், அதனை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்தார்.
மேலும், விரைவில் படத்தின் அப்டேட் தர இருக்கிறோம் என்பதையும் தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ஏற்கெனவே படத்தில் நடிகர்கள் ஜெயராம், மோகன், லைலா, சினேகா எனப் பலரும் இருக்கும் நிலையில், சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தயாரிப்பு குழுமமமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஒருவரான ஜாய்சன் இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உடல்நலத்தில் கவனம் செலுத்தக் கூடியவர் ஜாய்சன் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார்.