இறுதி நாட்களின் பெருந்துயரம் | இன்று நடிகை சாவித்ரி நினைவுதினம்!


தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகம் முழுவதுமாக கோலோச்சியவர் நடிகை சாவித்ரி. இந்திய திரையுலகமே நடிகை சாவித்ரியை வியந்து பார்த்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி என இருபெரும் துருவங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. பிளாக் அண்ட் வொயிட் எனப்படும் 60, 70களின் அந்தக் காலக்கட்டத்தில் நடிகைகளுக்கும் திரையில் கதாநாயகர்களுக்கு இணையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதில் நடிகையர் திலகமாக தன் அழகாலும், திறமையாலும் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சாவித்திரி, தன்னுடைய இறுதி காலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இறந்த கதை பெரும் துயரம். அவருடைய நினைவுநாளான இன்று அவர் குறித்த நினைவுகளைப் பார்க்கலாம் வாங்க...

நடிகை சாவித்திரி....

மீன் விழியும், தேன் சொட்டும் இதழ்களும், மென்சிரிப்புமாய் வலம் வந்த சாவித்திரிக்கு இன்று நினைவுநாள். சாவித்திரி, ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். சாவித்திாியின் இயற்பெயர் சசிகலாவாணி. இளம் வயதிலேயே நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவருக்கு மேடை நாடக வாய்ப்புகளும் வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்புத் தேடி வந்தவரை, 'நீ எல்லாம் ஏன்மா நடிக்க வந்த?' என அவமானப்படுத்தி அனுப்பிய ஜெமினி கணேசனே பின்னாளில் அவருக்கு கணவராய் அமைந்தது சுவாரஸ்யம். 1952 ஆம் ஆண்டு 'கல்யாணம் பண்ணிப்பார்' என்ற படம் மூலமாகத்தான் நடிகை சாவித்ரி திரையுலகில் அறிமுகமானார்.

கடைசி காலத்தில் சாவித்ரி...

'சரஸ்வதி சபதம்' படத்தில் சாவித்ரி நடித்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று உண்டு. அந்தப் படத்தில் சரஸ்வதி கதாபாத்திரத்தில் சாவித்ரி நடித்து இருந்தார். மேக்கப் முடித்து ஆடை, அலங்காரத்துடன் ஸ்டூடியோவுக்குள் சாவித்திரி வரும் போது எல்லோரும் தீபாரதனை காட்டி அவரை கலைமகளாகவே பாவித்தார்கள். அப்படி ஒரு தெய்வம்சம் பொருந்தியவர்.

சாவித்ரியின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது ஜெமினி கணேசனுடனான அவரது காதலும், திருமண வாழ்வும்தான். உச்சநட்சத்திரமாக வலம் வந்தவர் குடிக்கு அடிமையாகி வாழ்வைத் தொலைக்க அது ஒரு முக்கிய புள்ளியாய் அமைந்தது.

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ‘மனம் போல் மாங்கல்யம்’. அவர்கள் இருவருக்கும் காதல் உண்டாகக் காரணமாக அமைந்த படம் ‘மிஸ்ஸியம்மா’. சாவித்திரி மீது அளவுக்கடந்த அன்பு கொண்டவராக இருந்தார் ஜெமினி. 'மிஸ்ஸியம்மா’ எப்படி ஜெமினி-சாவித்திரி காதலுக்கு வழிவகுத்ததோ அதேபோல அவர்களது பிரிவுக்கு முதல் விதையிட்ட படம் ‘பிராப்தம்’.

தெலுங்கில் வெளியான ’மூகமனசுலு’ படத்தைத் தயாரித்து, இயக்க ஆசைப்பட்ட சாவித்திரியிடம் இந்தப் படத்தைத் தமிழில் தயாரிப்பது ஆபத்து என எச்சரிக்கை விடுத்தார் ஜெமினி. இதனால், இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், ஜெமினி சொன்னது போலவே, இந்தப் படம் சாவித்திரிக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது.

ஜெமினி தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து சாவித்திரியை திருமணம் செய்து கொண்டார். பின்னாளில் இது தெரிய வந்து ஜெமினியின் முதல் மனைவி அலமேலு மீது கார் ஏற்றி சாவித்திரி கொல்ல முயன்றதாக ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. பட நஷ்டம் சாவித்திரிக்கு பெரும் மனஉளைச்சலை கொடுத்தது. அதன் பிறகு வறுமையும், மது பழக்கமும் அவரை சூழ்ந்து கொண்டது. வறுமையின் காரணமாக சாவித்திரி மலையாள மொழி படத்தில் கவர்ச்சியாக, குடிகாரியாக நடித்திருந்தது ரசிகர்கள் பலருக்கும் வேதனை அளித்தது. ஒரு முறை சாவித்திரி இந்தோனேசியா சென்றிருந்தார். அங்கே விருந்தளித்த அந்நாட்டு அதிபர் சுகர்னோ மது அருந்தும்படி சாவித்திரியை வற்புறுத்தி இருந்தார். அதிலிருந்து அவர் மதுவுக்கு அடிமையானார் என்பார்கள். போதாத காலமாக நடிகர் சந்திரபாவுவின் நட்பும் இந்த மதுப்பழக்கத்தை ஊக்குவித்தது.

குடிப்பழக்கத்தால் உடல்நிலை மோசமாகி கிட்டத்தட்ட 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். சாவித்திரி 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தன்னுடைய 45 ஆவது வயதில் சென்னை லேடி வெலிங்ஸ்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆயிரத்தில் ஒருத்தியாக வாழ்ந்த நடிகையர் திலகத்தின் இறுதி நாட்கள் பெரும் துயரம் தரும் முடிவாக அமைந்தது.

x