இன்னமும் உரசிக்கொள்ளும் எம்ஜிஆர் - கருணாநிதி!


மு.க.முத்துவுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட மதுரை திமுக மாநாட்டில்...

திமுக நிறுவனர் அண்ணாதுரையின் அருமைத் தம்பிகளான எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒன்றாக வளர்ந்து பின்னர் ரெண்டாகப் பிரிந்து எதிரெதிர் துருவங்களாக மாறிப்போனவர்கள். 1950-களில் திரையுலகில் முன்னணி வசனகர்த்தாவாக கருணாநிதி வலம் வந்தார். 1952-ல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் சிவாஜி கணேசனா... கருணாநிதியா? என்று திண்ணைப் பட்டிமன்றமே நடந்தது. அந்தப் படத்தில் சிவாஜி பேசிய வசனங்கள் கருணாநிதியின் கருத்துக்களாகவே பார்க்கப்பட்டன.

எம்ஜிஆர், தானே சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, இரண்டு வேடங்களில் நடித்து தனது அரசியல் கனவுகளைச் சொன்ன படம் ‘நாடோடி மன்னன்’. 1958-ல் வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதில் தான் முதன்முதலாக திமுக கொடியை திரையில் காட்டினார் எம்ஜிஆர்! ‘பராசக்தி’ வெற்றி பற்றிய சர்ச்சையால் உஷாரான எம்ஜிஆர், திமுகவில் இருந்தபோதும் கருணாநிதியுடன் நட்புணர்வுடன் இருந்தாலும் படத்தின் சக்சஸ் கிரெடிட் கருணாநிதிக்கு போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதனால் அவரை ஓரமாய் ஒதுக்கிவிட்டு கவியரசு கண்ணதாசனை அந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதவைத்தார்.

நாடோடி மன்னன் படத்தில்...

அப்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக எம்ஜிஆர் கோலோச்சிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்குப் போட்டியாக தனது மகன் மு.க.முத்துவை களமிறக்கினார் கருணாநிதி. ‘இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்கி வந்த திரையுலகில் பிள்ளையோ பிள்ளை என வந்து விட்டார்’ என்று மு.க-வின் புதல்வர் முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தை பிரமாதமாய் விளப்பரப்படுத்தினார்கள்.

பிள்ளையோ பிள்ளை படத்தில் மு.க.முத்து - லட்சுமி

அந்தப் படத்தில் எம்ஜிஆரைப் போலவே சிகை, நடை, உடை, அலங்காரங்களுடன் மு.க.முத்து நடித்தார். 1972 ஜூன் 23-ம் தேதி ‘பிள்ளையோ பிள்ளை’ திரைக்கு வந்தது. ஒரு படம் வந்ததுமே, எம்ஜிஆர் மன்றங்களைக் கலைத்துவிட்டு மு.க.முத்து மன்றங்கள் அமைக்க திமுக மேலிடம் அழுத்தம் கொடுப்பதாக அப்போது புகார்கள் எழுந்தன.

‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளியான சூட்டோடு ஆகஸ்ட் முதல் வாரம் மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கும் சிறப்பு மு.க.முத்துவுக்கு கொடுக்கப்பட்டது.

1971- சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் எம்ஜிஆர் சுகாதாரத்துறைக்கு அமைச்சராக விரும்பினார். ஆனால், சினிமாவில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருக்க முடியாது என்று கருணாநிதி நாசூக்காக அதை தவிர்த்ததாக தகவல்கள் வெளியானது. (மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது திமுக சார்பில் மத்திய இணை அமைச்சராக இருந்துகொண்டே நடிகர் நெப்போலியன் சினிமாவில் நடித்தது வேறு விஷயம்) இதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மீது ஊழல் புகார் கூறி அவர்களின் சொத்துக் கணக்கைக் கேட்டதால் திமுகவில் இருந்து தூக்கப்பட்டார் எம்ஜிஆர். அதன் பிறகு அதிமுக என்ற புதிய கட்சி எம்ஜிஆர் தொடங்கியதும், 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1977-ல் அவர் முதல்வரானதும் வரலாறு.

நேருவுடன் இந்திரா காந்தி...

1980-ல் கூட்டணி உறவுகள் மாறின. இம்முறை, ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக’ என்று இந்திரா காங்கிரசோடு சேர்ந்தார் கருணாநிதி. 1976-ல் அவருக்கு நடந்தது 80-ல் எம்ஜிஆருக்கும் நடந்தது. அந்த ஆண்டு பிப்ரவரியில் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதைக் கருணாநிதி வரவேற்றார். அதைத் தொடர்ந்து மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ‘உட்கார்ந்தால் ஹண்டே, எழுந்தால் சண்டை’ என்று கருணாநிதியால் வர்ணிக்கப்பட்ட டாக்டர் எச்.வி.ஹண்டேயை எம்ஜிஆர் நிறுத்தினார்.

ஹெச்.வி.ஹண்டே

அந்தத் தேர்தலில் 699 ஓட்டுகள் என்ற சொற்ப வித்தியாசத்தில் கருணாநிதியிடம் ஹண்டே தோல்வியடைந்தார். ஹண்டேயை தோற்கவைத்ததே எம்ஜிஆர் தான் என்றுகூட அப்போது பேசப்பட்டது. அப்போது அதிமுக வென்று எம்ஜிஆர் முதல்வரானார். 1971-ல், தனக்கு மறுக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை கருணாநிதியிடம் தோற்ற ஹண்டேவுக்கு கொடுத்து அழகுபார்த்தார் எம்ஜிஆர். (கருணாநிதியிடம் தோற்றாலும் எம்எல்சி-யாக தேர்வு செய்யப்பட்டு சட்டமேலவைக்குள் வந்தார் ஹண்டே)

இப்படி கடைசி வரை எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் இடையில் இருந்து வந்த அரசியல் உரசல்கள் இருவரும் மறைந்த நிலையிலும் இப்போதும் ஒருவகையில் தொடர்வதுதான் ஆச்சரியம்!

டிசம்பர் 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள். யார் கொடுத்த யோசனையோ... அதே நாளில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாட தமிழ்த் திரையுலகம் தடபுடலாய் தயாரானது. முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் சமூகமளிக்க இசைந்திருந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் ‘விழாவுக்கு வரச் சொல்லி’ அழைப்பிதழ் போனது.

கோலிவுட், பாலிவுட் திரை பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் ஆட்டம் பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. எம்ஜிஆர் நினைவு நாளில் அதுவும் அவர் நினைவிடம் அருகிலேயே உள்ள சேப்பாக்கம் அரங்கில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் வேண்டாம் என்றும் வேறு தேதியில் விழாவை நடத்துமாறும் அதிமுக மற்றும் எம்ஜிஆர் மன்றங்கள் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. என்றாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை.

எம்ஜிஆருடன் கருணாநிதி...

இந்நிலையில்தான், சென்னையில் மழையின் கோர தாண்டவம் தொடங்கியது. மிக்ஜாம் புயலால் கொட்டிய பெருமழை சென்னையை துவம்சம் செய்தது. இதையடுத்து, புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழா ஜனவரி 6-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆக, எம்ஜிஆர் நினைவு நாளில் கருணாநிதிக்கு விழா நடக்கவில்லை.

உதயநிதி

‘சரி, அது போனால் போகட்டும்... இதையாவது நடத்துவோம் என நினைத்து, ஏற்கெனவே டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்ட திமுக இளைஞரணி மாநில மாநாட்டை எம்ஜிஆர் நினைவு நாளான அதே டிசம்பர் 24-ம் தேதிக்கு மாற்றினார்கள். இங்கேயும் கட்டையைப் போட்டது கனமழை. கடந்த ஞாயிறு முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை பெருமழை புரட்டிப்போட்டது. இதைத் தொடர்ந்து திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு முக்கியத்துவம் கூட்டும் இளைஞரணி மாநாட்டையும் தனது நினைவு நாளில் நடத்தவிடாமல் பிரேக் போட்டுவிட்டார் எம்ஜிஆர் என்று தான் இப்போதும் நினைக்கத் தோன்றுகிறது!

x