பாலச்சந்தர் நினைவு தின பகிர்வு | விசிட்டிங் கார்டு கொடுத்த எம்.ஜி.ஆர்... வளர்த்தெடுத்த நட்சத்திரங்கள்!


இயக்குநர் பாலச்சந்தர்...

சினிமாவில் தினந்தோறும் புது இயக்குநர்களும், நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் வந்த வண்ணமே இருக்கின்றனர். ஆனால், காலத்தைக் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பவர்கள் சிலர் மட்டுமே. அப்படியான வெகு சிலரில் முக்கியமானவர் ’இயக்குநர் சிகரம்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கைலாசம் பாலச்சந்தர்.

ஹீரோவுக்கான கதையை உருவாக்க வேண்டும், கமர்ஷியல் வெற்றியைத் தர வேண்டும், காலத்துக்கும் பெயர் சொல்ல வேண்டும் என்ற சினிமா அழுத்தங்களுக்கு எல்லாம் கட்டுப்படாமல் தன் கதை மீதும் தன் திறமை மீதும் அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தார் பாலச்சந்தர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான் என பல நட்சத்திரங்களை வளர்த்தெடுத்தவர். அவரது நினைவு தினமான இன்று, நினைவுகளை ரீவைண்ட் செய்வோம் வாங்க...

தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலத்தில் கைலாசம்- காமாட்சி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் பாலச்சந்தர். இளம் வயதிலேயே அவருக்கு நாடகங்கள் மீதான ஆர்வம் தொற்றிக் கொண்டது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். அதன் பிறகு சென்னையில், அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார்.

சென்னையில் உள்ள பிரபல நாடக்குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர், ஒருகட்டத்தில் சொந்தமாகவே ஒரு நாடகக்குழுவைத் தொடங்கினார். தனது எழுத்தில் ‘மேஜர் சந்திரகாந்த்’, ’சர்வர் சுந்தரம்’, ’நீர்க்குமிழி’, ’மெழுகுவர்த்தி’, ’நவக்ரஹம்’ போன்ற பல நாடகங்களை அவரே தயாரித்து இயக்கினார். இந்தக் கதைகள் எல்லாம் பின்னாளில், மிகப்பெரிய வெற்றிப் படங்களாக உருவானது.

இயக்குநர் பாலச்சந்தர்...

நாடகத் தொடர்பில் இருந்து சினிமா தொடர்புகள் கிடைத்து சினிமாவுக்குள்ளும் அடியெடுத்து வைத்தார் பாலச்சந்தர். எம்.ஜி.ஆர். நடித்த ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு தான் அவருக்கான விசிட்டிங் கார்டு. இவரது ‘சர்வர் சுந்தரம்’ கதையை கிருஷ்ணன்- பஞ்சு இயக்குநர்கள் இயக்க, படம் பெரும் வெற்றிப் பெற்றது. நாகேஷ் எனும் நகைச்சுவை கலைஞனுக்குள் இருக்கும் மகத்தான நடிகனை திரையில் கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் பாலச்சந்தர் முக்கியமானவர்.

‘நீலவானம்’, ‘நாணல்’, ‘பாமா விஜயம்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘இருகோடுகள்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வ ராகங்கள்’ என அவர் எடுத்தப் படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவில் முக்கியமானப் படங்களாக அமைந்தது. சமூகம் சார்ந்த விஷயங்கள், பெண்களின் நிலை, அவர்களது முன்னேற்ற பற்றி பேசுவது இவரது பெரும்பாலான படங்களின் கருப்பொருளாக அமைந்தது.

கமல், பாலச்சந்தர், ரஜினி...

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் என இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு பாலச்சந்தருக்கு உண்டு. கமல்ஹாசன், நாகேஷ் மேல் பாலச்சந்தருக்கு எப்போதும் தனிப்பிரியம் உண்டு. அதுபோல, ரஜினியைக் கண்டறிந்து சினிமாவுக்குள் கொண்டு வந்தது கே.பி.தான். அப்போது சிவாஜி கணேசன் என்ற பெயர் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம்.

இதனால், தான் கண்டறிந்த சிவாஜி ராவுக்கு தன்னுடைய ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தின் கதாபாத்திரப் பெயரான ரஜினிகாந்தை சூட்டினார். பாலச்சந்தரைத் தனது தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கும் ரஜினி, ஒருமுறை பாலசந்தர் குறித்து பேசும் போது, “என்னைக் கண்டெடுத்து, எனக்குப் பெயர் கொடுத்து எனது பலவீனத்தை நீக்கி, என் பலத்தை எனக்குக் காட்டியவர் அவர். என்னுடைய அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் பாலச்சந்தர் இவர்கள் நான்கு பேரும்தான் எனக்குக் கடவுள்” என்றார்.

இயக்குநர் பாலச்சந்தருடன் கமல்ஹாசன்...

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் முத்திரை பதித்தார் கே.பி. குறிப்பாக இவர் இயக்கிய ‘ஏக் துஜே கேலியே’ திரைப்படம் காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது மட்டுமல்லாமல் இந்தியிலும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது. இயக்குநராக மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும் வெற்றிப் பெற்றார் கே.பி.

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் மூலம், ’நெற்றிக்கண்’, ‘ரோஜா’, ‘சாமி’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இயக்குநராக தேசிய விருது, நந்தி விருது உள்ளிட்டப் பல விருதுகளை வென்றிருக்கிறார்.

இயக்குநர் பாலச்சந்தர்...

படங்களைப் போலவே, சீரியல்களிலும் வெற்றி கண்டார் பாலச்சந்தர். ’ரமணி vs ரமணி’, ‘ரயில் சிநேகம்’ உள்ளிட்டப் பல சீரியல்களையும் அவர் தயாரித்து இயக்கினார். 101ஆவது படமாக அவர் ‘பொய்’ படத்தை இயக்கினார். அதுதான் இயக்குநராக அவரது கடைசிப் படம். அதன் பிறகு, ‘ரெட்டைச்சுழி’, ‘குசேலன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தன்னுடைய 84ஆவது வயதில் உடலநலக் குறைவு காரணமாக காலமானார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் மறைந்தாலும், சினிமா உள்ள காலம் வரையிலும் அவரது படங்கள் இன்றும் ரசிகர்களிடையே, ‘இது கே.பி. படம்’ என்று அவரது புகழைப் பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.

x