குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!


பாடகி பார்க் போ ராம்

தென் கொரிய பாடகி பார்க் போ ராம் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 30. அவரது மரணம் தென் கொரிய இசைத் துறையையும் கொரியன் பாப் இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த பாடகி பார்க் போ ராம் தனது மயக்கும் இசை மற்றும் பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்த ஆண்டு இசைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்ய இருந்த பார்க் தனது 30 வது வயதில் அகால மரணம் அடைந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவரது இறப்புச் செய்தியை ‘XANADU எண்டர்டெயின்மெண்ட்’ உறுதிப்படுத்தியுள்ளது. ‘பார்க் போ ராம் ஏப்ரல் 11 அன்று இரவு திடீரென காலமானார். ’XANADU என்டர்டெயின்மென்ட்’ கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த சோகத்துடன் பார்க் போ ராமை ஆதரிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரிவிக்கிறோம். பார்க்கின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும். பார்க்கிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள், பார்க் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஒரு தனியார் கூட்டத்தில் இருந்ததாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும், அங்கு அவர் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி, பார்க் இரவு 9:55 மணிக்கு கழிவறைக்குச் சென்றுள்ளார்.

ஆனால் நேரம் கடந்தும் அவர் திரும்ப வரவில்லை. இதனால், பதற்றமடைந்த அவரது தோழிகள் கழிவறைக்குச் சென்று அவரைப் பார்த்தபோது சிங்க் மீது சாய்ந்து சுயநினைவின்றி கிடந்திருக்கிறார். முதலுதவி செய்தும் பலனில்லாததால் ஹன்யாங் பல்கலைக்கழக குரி மருத்துவமனைக்கு பார்க்கை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரவு 11:17 மணிக்கு இறந்து விட்டதாக அறிவித்தார்கள். அவரது இறப்புக்கு மது அருந்தியது காரணமா அல்லது வேறு எதாவது பிரச்சினையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x