நடிகை தேவதர்ஷினி தனது மகளுடன் விஜய் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை தேவதர்ஷினி சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர். ’ரமணி vs ரமணி’, 'அண்ணாமலை’, ‘கோலங்கள்’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சீரியல்கள் மட்டுமல்லாது, பல படங்களிலும் ‘ஃபேமிலி மேன்’ உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
தேவதர்ஷினியின் கணவர் சேத்தனும் நடிகர்தான். இந்த நிலையில், இவர்கள் குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசாக இவர்களது மகள் நியதியும் நடிக்க வந்திருக்கிறார். ‘96’ படத்தில் தேவதர்ஷினியின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நியதி. முதல் படத்திலேயே தனது சமத்தான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
இதற்கடுத்து, மலையாள படம் ஒன்றிலும் நடித்திருந்தார் நியதி. சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கும் அவர், தனது அம்மாவுடன் சேர்ந்து விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் இருந்து ‘நான் ரெடிதான்’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நியதி நடனத்தில் கலக்க, மகளுக்கு சமமாக தேவதர்ஷினியும் இந்த வீடியோவில் அசத்தியுள்ளார். 'தளபதி ரசிகர்கள் மற்றும் லியோ பட ரசிகர்கள் மன்னிக்க’ எனக் கூறி இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் தேவதர்ஷினி .