பிரபல சின்னத்திரை நடிகை கிருத்திகா, தனக்கு விவாகரத்து ஆன விஷயத்தையும் தன் மகனைத் தத்துக் கொடுத்து விட்டதையும் பகிரங்கமாகக் கூறி இருக்கிறார்.
பிரபல சின்னத்திரை நடிகை கிருத்திகா தனக்கு விவாகரத்து ஆன விஷயத்தை முதல்முறையாகப் பேட்டி ஒன்றில் மனம் திறந்து சொல்லி இருக்கிறார். இதுமட்டுமல்லாது தனது மகன் விஷ்ணுவைத் தத்துக் கொடுத்துவிட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடித்து வருபவர் கிருத்திகா. இதற்கு முன்பு அவர் பல சீரியல்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகனுடன் கலந்து கொண்ட இவர், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார்.
நடனத்தில் ஆர்வம் கொண்ட கிருத்திகா, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. வீட்டின் வற்புறுத்தலின் பேரில் அருண் என்பவரைத் திருமணம் செய்தார்.
இந்த நிலையில் விவாகரத்து குறித்து பேட்டியில் பேசி இருக்கும் கிருத்திகா, “திருமணம் ஆனதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப் போகாமல் இருந்தது. இதனால், பிரச்சினைகளும் வந்தது. பின்பு, வீட்டில் எல்லோரும் பேசி முடிவெடுத்த பின்பே விவாகரத்து வாங்கினோம். ஆனால், அப்போது என் மகனிடம் யாராவது தந்தை குறித்துக் கேட்டால் கஷ்டப்படுவானோ என கவலைப்பட்டேன். ஆனால், அவனுக்கு அப்பாவாக இருந்து என் அண்ணன் அவனை வளர்த்து வருகிறார். என் அண்ணனுக்கு என் மகனைத் தத்துக் கொடுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தனக்கு ஆசை இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார் கிருத்திகா.