நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!


பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு (74) இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வெளியான ‘டிஸ்கோ டான்சர்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஐ அம் எ டிஸ்கோ டான்சர்’ பாடல் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. தனது அறிமுகப் படமான ‘மிர்கயா’விலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கியவர். இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒடியா போஜ்புரி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1989ஆம் ஆண்டில் இவர் நடித்த 19 படங்கள் வெளியானது. ஒரே ஆண்டில் இத்தனை படங்கள் வெளியானதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் இவர் தடம் பதித்திருக்கிறார். பாஜகவை சேர்ந்த இவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

இந்திய சினிமாவில் இவரது கலைச்சேவையைப் பாராட்டும் விதமாக மத்திய அரசு இவருக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது அறிவித்து கெளரவித்துள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ள 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இவருக்கு விருது வழங்கப்படவுள்ளது. திரையுலகினரும் ரசிகர்களும் மிதுன் சக்ரவர்த்திக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். மூன்று முறை தேசிய விருது வென்றுள்ள இவருக்கு இந்தாண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x