அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ‘லப்பர் பந்து' படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் படப் பாடல்கள், போஸ்டர்கள் குறியீடுகளாக இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தப் படத்தை விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா தனது குடும்பத்தினருடன் பார்த்தார்.
பின் நிருபர்களிடம் பேசிய அவர், லப்பர் பந்து படம் முழுவதும் விஜயகாந்தின் தாக்கம் இருந்தது. அவரின் ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்' பாடல் எங்கும் வைரலாகி வருகிறது. இனி ஐபிஎல் தொடரில் தோனிக்கும் அந்தப் பாடலைத்தான் போட்டு வரவேற்பார்கள். திரைப்படங்களில் விஜயகாந்த் பாடல், போஸ்டர்களை பயன்படுத்தினால் காப்புரிமை கேட்கமாட்டோம். விஜயகாந்த் எங்கள் சொத்தல்ல, அவர் மக்களின் சொத்து” என்றார்.