'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!


அபர்ணா தாஸ்

’டாடா’ படப்புகழ் நடிகை அபர்ணா தாஸூக்கு ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகர் தீபக் பரம்போலுடன் இந்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

மலையாளத்தில் ’ஞான் பிரகாஷன்’ என்ற படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகை அபர்ணா தாஸ். அதன் பின் ‘மனோஹரம்’ என்ற படம் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இந்த படத்தில்தான் இவரும் நடிகர் தீபக் பரம்போலும் இணைந்து நடித்திருந்தனர். இதன் மூலம் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி இருக்கிறது. இந்த நிலையில், இந்த மாதம் 24-ம் தேதி இந்த ஜோடியின் திருமணம் நடக்கிறது.

தீபக் பரம்போல் வினீத் ஸ்ரீனிவாசனின் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘தட்டத்தின் மறையத்து’ ,’கண்ணூர் ஸ்குவாட்’ சமீபத்தில் வசூலில் சக்கை போடு போட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அபர்ணா தாஸ் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் சிறியது என்றாலும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். பின்னர், நடிகர் கவினுடன் இவர் இணைந்து நடித்த ‘டாடா’ படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படி கரியரில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே திருமணம் முடிக்கிறார் அபர்ணா தாஸ். இந்த ஜோடியின் திருமண பத்திரிகை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x