திரையரங்கில் தீப்பிடித்து எரிந்த ஜூனியர் என்.டி.ஆர் கட் அவுட்!


ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர், சைஃப் அலிகான் நடித்துள்ள படம், ‘தேவரா’. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் நேற்று வெளியானது. இதைக் கொண்டாடும் விதமாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில திரையரங்குகளில், ஜூனியர் என்.டி.ஆரின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் அதற்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் நேற்று கொண்டாடினர்.

இதற்கிடையே, ஹைதராபாத்தின் ஆர்டிசி எக்ஸ் சாலையில் உள்ள சுதர்சன் திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட் அவுட்டில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் ரசிகர்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

x