பிக் பாஸ் தமிழ்: முந்திய சீசன்களில் சர்ச்சையை கிளப்பிய போட்டியாளர்கள் யார் யார்?


பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. பிக் பாஸ் என்றாலே பரபரப்புகளும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி. தமிழில் ஏழு சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளர்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.

நடிகை ஓவியா (பிக் பாஸ் சீசன்1):

பிக் பாஸ் தமிழில் முதல் சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார் நடிகை ஓவியா. நடிகர் ஆரவை காதலிப்பதாக சொல்லி பரபரப்பு கிளப்பினார். இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுத்த முத்தமும் பேசுபொருளானது. இதை ‘மருத்துவ முத்தம்’ என சொல்லி பிரச்சினையை அணைத்தார் கமல்ஹாசன். இதுமட்டுமில்லாமல், பயோபோலர் டிஸாடர் தனக்கு இருப்பதாக சொல்லி தண்ணீரிலும் குதித்தார்.

நடிகை காயத்ரி ரகுராம் (பிக் பாஸ் சீசன்1):

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் காயத்ரி ரகுராம். போட்டியாளர்கள் பலருடனும் சண்டையிட்டு வந்தது மட்டுமல்லாது, ‘சேரி பிஹேவியர்’ என்ற சொல்லை சொல்லி இணையவாசிகளின் வெறுப்புக்கு ஆளானார்.

ஜூலி (பிக் பாஸ் சீசன்1):

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்த ஜூலி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஆனால், வெளியே அவருக்கு கிடைத்த புகழ் முற்றிலும் மாறியது. மாற்றி மாற்றி பேசுவது, பொய் சொல்வது போன்ற விஷயங்களால் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்றார்.

ஐஸ்வர்யா தத்தா (பிக் பாஸ் சீசன்2):

பாலாஜி மேல் குப்பையை கொட்டியது அடாவடியாக நடந்து கொண்டது என இரண்டாவது சீசனில் வலம் வந்தார் ஐஸ்வர்யா தத்தா.

மகத் ராகவேந்திரா (பிக் பாஸ் சீசன்2):

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்ற மும்தாஜை விமர்சித்துப் பேசியதால் நடிகர் கமல்ஹாசனால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார் மகத்.

நடிகர் சரவணன் (பிக் பாஸ் சீசன்3):

இளைஞனாக இருந்தபோது பேருந்தில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் தான் நடந்து கொண்டதாக சரவணன் பேசியது சர்ச்சையானதால் இரவோடு இரவாக பிக் பாஸ் இல்லத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

நடிகை மீரா மிதுன் (பிக் பாஸ் சீசன்3):

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சர்ச்சைக்குரிய மற்றொரு போட்டியாளர் மீரா மிதுன். அந்த சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்ட இயக்குநர் சேரன் தன்னுடைய இடுப்பைப் பிடித்தார் என பேசியது சர்ச்சையக் கிளப்பியது.

நடிகை மாயா (பிக் பாஸ் சீசன்7):

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கண்டெண்ட் குடவுனாக இருந்தார் நடிகை மாயா. பல பிரச்சினைகளை போட்டியாளர்களிடம் தீமூட்டி விட்டவர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட முக்கிய காரணமாக இருந்தார்.

x