டூயட் குறைந்து போனதற்கு என்னைப் போன்றவர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!


பார்வதி நாயர்

அழகு, திறமை இரண்டிலும் அசத்தும் பார்வதி நாயர், மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி என ஒரு பெரிய ரவுண்ட் வந்திருக்கிறார். தற்போது அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஆலம்பனா’ ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில் காமதேனுவுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

அஜித், விஜய், கமல், சூர்யா என்று மாஸ் ஹீரோக்களோடு படம் செய்த உங்களை சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லையே ஏன்?

மலையாளம், இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. கடந்த 8 ஆண்டுகளில் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளை கரோனா பெருந்தொற்று எடுத்துக்கொண்டுவிட்டது. அந்தநேரத்தில் பான்டமிக் வருவதற்கு முன்பு ஒப்புக்கொண்ட மலையாளம், தமிழ், இந்திப் படங்களை நடித்துக்கொடுத்தேன்.

பார்வதி நாயர்

1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கப்பட்ட மூன்றாவது தொடரிலேயே இந்தச் சாதனையை படைத்தது. அப்போது கபில்தேவ் இந்திய அணியின் கேப்டன். அந்த உணர்ச்சிகரமான வரலாறுதான் ‘83’ என்கிற தலைப்பில் இந்தியில் படமானது. அதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தேன்.

இந்தியாவின் பல மொழிகளில் ‘83’ படம் ரிலீஸ் ஆனது. அந்தப் படத்தின் முக்கியத்துவம் கருதி, அதற்கு அதிக முன்னுரிமைக் கொடுத்து நடித்தேன். தமிழில் ‘சீதக்காதி’ படத்துக்குப் பிறகு பெரிய பேனர், பெரிய ஹீரோ படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானேன். அதற்காக மற்ற படங்களை ஒப்புக்கொள்ளாமல் காத்திருந்தேன். ஆனால், கரோனாவால் அது தாமதமானது. அந்தப் படமும் இப்போது விரைவில் தொடங்க இருக்கிறது.

பார்வதி நாயர்

இதற்கிடையில்தான் நான் வைபவ் ஜோடியாக நடித்துள்ள ‘ஆலம்பனா’ இப்போது ரிலீஸ் ஆகிறது. ஒன்றை இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டேன். எத்தனை பெரிய படமாக இருந்தாலும் அதற்காக காத்திருக்காமல், நல்ல வாய்ப்புகளை தவறவிடக் கூடாது என்பதில் தெளிவு பெற்றுவிட்டேன்.

‘ஆலம்பனா’வில் என்ன மாதிரியான ரோல்?

இதில் சோலோ ஹீரோயினாக நடித்திருக்கிறேன். இது நவீன காலத்தில் நடக்கும் ஒரு ஃபாண்டஸி கதை. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், வி.எஃப்.எக்ஸ் ஆகியவற்றுக்கு தயாரிப்பாளர் பணத்தை வாரிக் கொட்டியிருக்கிறார். அன்லக்கி ஹீரோவுக்கு ஆலம்பனா என்கிற பூதம் வந்து கேட்டதையெல்லாம் கொடுக்கிறது. ஆனால், ஹீரோ அந்த பூதத்தை எதற்காக மட்டும், எந்த நேரத்தில் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் கதை.

இதில், நான் ஹீரோவின் காதலியாக வருகிறேன். ஆலம்பனா என்கிற பூதமாக முனீஸ்காந்த் நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், லியோனி சார், பெரிய வில்லன் கூட்டம் என்று பயங்கர கலகலப்பும் ஆக்‌ஷனும் காதலும் கலந்த படம். ஸ்ட்ரெஸ்ஃபுல் லைஃபில் பார்க்க வேண்டிய ரிலீஃபான பொழுதுபோக்குப் படம்.

பார்வதி நாயர்

இதுமாதிரியான படங்கள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதை சரியாக கேச் செய்த பாரி கே.விஜய் அட்டகாசமாக திரைக்கதை எழுதி அவருடைய முதல் படமாக இயக்கியிருக்கிறார். என்னை இதில் ரசிகர்களுக்கு இன்னும் பிடிக்கும். இதில் அளவான கிளாமர் நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். ஆலம்பனா பூதத்துடன் எனக்கும் பல காட்சிகள் இருக்கின்றன.

ஹீரோவை முன்னிறுத்தும் படங்களில் ஹீரோயின் இன்னமும் ஒப்புக்குத்தான் என்று நினைக்கிறீர்களா..?

இல்லை... இப்போது வுமன் சென்ட்ரிக் படங்கள் லாபம் சம்பாதித்துக் கொடுக்கத் தொடங்கிவிட்டன. இதனால், ஹீரோ படங்களில் ஹீரோயின் கதாபாத்திரங்களை ஸ்ட்ராங்காக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். முன்பு இருந்ததைப் போல, இப்போது பாடல் காட்சிகளும் குறைந்துவிட்டதால், பாடல் காட்சிகளில் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த ஹீரோயின்களுக்கு கதையில் இயல்பாகவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிடுகிறது இல்லையா? இது வரவேற்கத் தக்க நல்ல ட்ரெண்ட்.

பார்வதி நாயர்

படங்களில் டூயட் குறைந்து போனதற்கு என்னைப் போன்றவர்கள் மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். உண்மையில் டூயட் என்பதையெல்லாம் எல்லா கதைகளிலும் ரசிகர்கள் விரும்புவதில்லை. இந்த ரசனைப் போக்கு இன்னும் பல மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.

மலையாளத்தில் தொடர்ந்து பிஸியாக இருக்கிறீர்கள்... அங்கே என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் அமைகின்றன?

மலையாளத்தில் மூன்றுவிதமான படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒன்று, அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்கள். அதுபோன்ற படங்களில் மம்மூட்டி, மோகன்லால் மாதிரியான சூப்பர் ஸ்டார்களே நடிக்கிறார்கள். அவர்களே கமர்ஷியல் படங்களிலும் நடிக்கிறார்கள். கமர்ஷியல் படங்களுக்குக் கூட அங்கே நல்ல ஸ்கிரீன்பிளே ரைட்டர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

தமிழிலோ இயக்குநர்களே அந்தத் திறமையில் இன்ட்ரஸ்ட் காட்டுகிறார்கள். மலையாளத்தில் மூன்றாவதாக ஒரு போக்கு உண்டு. நல்ல கதையும் இருக்கும்; அதில் கமர்ஷியல் அம்சங்களும் இருக்கும் படங்களைப் பார்க்க முடியும். எனக்கு எல்லா வகையான படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகிறது.

பார்வதி நாயர்

தற்போது, தியான் சீனிவாசன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளேன். அதில் ஒரு புகழ்பெற்ற மலையாளப் பாடலை ரீமேக் செய்கிறோம். அந்தப் பாடலை வெளிநாட்டில் ஷூட் செய்ய இருக்கிறார்கள். அந்தப் பாடல் காட்சி ஷூட் மட்டும் பாக்கியிருக்கிறது. மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

’வைல்டு பிளானெட்’ மாதிரி வீட்டு விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தூதராக உங்கள் ஆர்வத்தைக் காட்டியிருந்தீர்கள். குறிப்பாக, நாய்கள் மீது அதிக அன்புகொண்டிருக்க என்ன காரணம்?

மனிதர்களுக்கு கடவுள் பேசும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். நமக்கு ஒரு பிரச்சினை, பசி என்றால் அதை மற்றவர்களிடம் நமது மொழியில் சொல்கிறோம். ஆனால், மொழியற்ற விலங்குகள் என்ன செய்யும். அதனால்தான் நம்மை நம்பியிருக்கும் உயிர்களுக்கு குறிப்பாக, நாய்களுக்கு நமது அன்பு தேவைப்படுகிறது.

பார்வதி நாயர்

நிராதரவாக எந்தவொரு நாயும் தெருவில் விடப்படக்கூடாது. இதை வலியுறுத்தவே எனது அன்பை நாய்களிடம் காட்டுகிறேன். சிறுவயது முதலே நாய்கள் என்றால் எனக்கு உயிர். நான் ஷூட்டிங்கில் வெளியூர்களில் பிஸியாக இருக்கும்போது அவற்றை கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒரு பணியாளை அமர்த்தியுள்ளேன்.

எனது செல்லங்கள் நான் அருகில் இல்லையே என்று ஏங்கிவிடக்கூடாது என்பதற்காக அவற்றுடன் தினமும் ஒருமுறையாவது வீடியோ காலில் பேசிவிடுவேன். நான் பேசாவிட்டாலும் என்னை வீடியோ காலில் பார்க்க வேண்டும்... பேச வேண்டும் என்று பணியாளரை அவை தொந்தரவு செய்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..!

x