தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில், அண்டை மாநிலங்களில் உள்ளது போல 24 மணி நேரமும் திரைப்படங்களைத் திரையிட அரசு அனுமதியளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுபற்றி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் கூறும்போது, “பெரிய நடிகர்களின் படங்களை 8 வாரம் கழித்தும் அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படங்களை 6 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் வெளியிட, தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த் திரைப்படங்களை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட வேண்டும். சில மாநிலங்களில் முன்பே திரையிடுவதால் தமிழகத்தில் வசூல் பாதிப்பு ஏற்படுகிறது.
அரசு, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250வரையும் ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும்ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு ரூ.150 வரையும் கட்டணம் நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும்.
மால்களில் உள்ள திரையரங்குகளில் கமர்ஷியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுத்தால் திரையரங்குகளை நஷ்டமின்றி நடத்த முடியும்” என்றார்.