திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!


சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தை கிண்டலடித்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சி கலக்கப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதுமட்டுமல்லாது, இந்த விஷயம் இந்து மக்களின் மத உணர்வுகளோடு தொடர்புடையது என்பதால் அரசியல் ரீதியாகவும் பல விவாதங்களை இந்த விவகாரம் எழுப்பியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கார்த்தி இந்த வாரம் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் தனது ‘மெய்யழகன்’ பட புரோமோஷனுக்காக நேற்று ஐதராபாத் சென்றார். அங்கு நிகழ்ச்சி தொகுப்பளார் கார்த்தியிடம் ”லட்டு வேண்டுமா?” என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது சென்சிடிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார். லட்டு விவகாரம் பற்றி கார்த்தி கிண்டல் செய்துள்ளார் என நடிகர் பவன் கல்யாண் கோபப்பட்டுள்ளார்.

இன்று காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்‌ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார். பின்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுபற்றி பேசியபோது, “சினிமா நிகழ்வில் லட்டுவை கேலி செய்வீர்களா? இது சென்சிடிவான விஷயம். உங்களுக்கு நடிகராக மரியாதை கொடுக்கிறேன். சனாதன தர்மம் என வரும்போது நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

இதற்குதான் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரி தனது எக்ஸ் ப்க்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். “பவன் கல்யாண் அவர்களே உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைபிடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x