இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு செல்கிறது லாபதா லேடீஸ்


சர்வதேச அளவில் திரைப்படத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இந்த விருதைப் பெறுவது, வாழ்நாள் கவுரவம் என்று திரையுலகினர் கருதுகின்றனர். இதில் ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப் படம்’ என்ற பிரிவுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

97-வது ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கான படத்தைத் தேர்வு செய்ய அசாம் இயக்குநர் ஜானு பருவா தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 29 திரைப்படங்களைப் பார்த்து, இறுதியில் ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை தேர்வு செய்துள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டாரக்கரா, “ தமிழில் இருந்து தங்கலான், வாழை, கொட்டுக்காளி, மகாராஜா, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய 6 படங்கள், தெலுங்கிலிருந்து 3, மலையாளத்தில், உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம் உள்ளிட்ட 4 படங்கள், இந்தியில் 12 படங்கள் மற்றும் மராத்தி, ஒடியா மொழிப்படங்களும் பரிந்துரை பட்டியலில் இருந்தன. இறுதியில் ‘லாபதா லேடீஸ்’ படத்தை ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவுக்கு அனுப்ப தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது” என்றார்.

ஆமிர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’, திரையரங்கிலும் ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கருக்கு அனுப்புவது குறித்து கிரண் ராவ் கூறும்போது, “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அங்கீகாரம் எனது குழுவின் அயராத உழைப்புக்குச் சான்று. இந்தியாவைப் போலவே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களையும் இந்தப் படம் ஈர்க்கும்என நம்புகிறேன். அற்புதமான திரைப்படங்களில் இருந்து ‘லாபதா லேடீஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என் பாக்கியம்”என்று தெரிவித்துள்ளார்.

x