பவர் ஸ்டார் என அழைக்கப்படும் சீனிவாசனுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பணமோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவராக இருந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிகராக மாறியவர் சீனிவாசன். இவர் சொந்தமாகத் தயாரித்து நடித்த ‘லத்திகா’ படத்தில் இருந்து சீனிவாசன் ‘பவர் ஸ்டார்’ ஆனார். நடிகர் சந்தானத்துடன் இணைந்து நிறைய நகைச்சுவை கதாபாத்திரங்களில் பவர் ஸ்டார் நடித்துள்ளார். இந்த நிலையில், 15 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக இறால் பண்ணை அதிபரை ஏமாற்றியதாக ராமநாதபுரத்தில் பவர் ஸ்டார் மீது செக்மோசடி வழக்கு பதிவானது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் உப்பளம் மற்றும் இறால் பண்ணை வைத்துள்ளார். இந்த நிலையில், இவரின் தொழிலை மேலும் பெருக்குவதற்காக 15 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு டாக்குமென்டேஷன் சார்ஜ் ஆக ரூ.14 லட்சம் தர வேண்டும் எனக் கூற, அவர் கேட்ட பணத்தை கடந்த 2019-ம் ஆண்டு முனியசாமி கொடுத்திருக்கிறார்.
ஆனால், அவரிடம் பணம் வாங்கிவிட்டு போலி செக்கைக் கொடுத்துள்ளார் சீனிவாசன். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்தார் பவர் ஸ்டார்.
இதையடுத்து, செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்த குற்றத்திற்காக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...