‘வேட்டையன்’ படத்துக்கு ’படையப்பா’ தான் இன்ஸ்பிரேஷன் - இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஞானவேல்!


நேற்று சென்னையில் நடந்த ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ‘படையப்பா’ படத்தின் அந்த ஊஞ்சல் காட்சி தான் ’வேட்டையன்’ படத்திற்கான என இயக்குநர் ஞானவேல் பேசியிருக்கிறார்.

‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஞானவேல், “இந்த மேடையில் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நான் இப்போது நின்றுக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் அவர் தான். எல்லாருக்கும் ரஜினி படத்தில் ஒரு ஸ்டைல் மற்றும் காட்சி பிடிக்கும். எனக்கு ‘படையப்பா’ படத்தில் வரும் ஊஞ்சல் சீன் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்துதான் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதினேன்.

எல்லா தலைவர்களுக்கும் சரியான தொண்டர்கள் கிடைப்பார்கள் ஆனால் எல்லா தொண்டர்களுக்கும் சரியான தலைவன் கிடைப்பதில்லை. அப்படி சரியான தலைவனாக கிடைத்து இருப்பவர் தான் ரஜினிகாந்த். எப்படி எப்போதும் முதல் இடத்தில் இருக்கிறீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அட்ஜஸ்ட், அக்காமடேட், அடாப்ட்’. இந்த மூன்றும் தான் அதற்கு காரணம்’ என்று சொன்னார். தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். அதே நேரம் டிக்கெட் எடுத்து பார்க்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு கிடைக்க வேண்டும். இது இரண்டையும்தான் படப்பிடிப்பு முழுக்க ரஜினிகாந்த் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அது எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது. அவருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன்.

அமிதாப் பச்சன் எப்போதெல்லாம் செட்டில் இருக்கிறாரோ, நான் அதற்கு முன்பாக நான் இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினி எனக்கு கொடுத்த முதல் அறிவுரை. ஆனால் என்னால் அதை செய்யவே முடியவில்லை. காரணம், அமிதாப் பச்சன் கேரவனுக்கு செல்லவே மாட்டார். எப்போதுமே ரஜினி வருவதற்கு முன்பே அவர் செட்டுக்கு வர விரும்புவார். இரண்டு சூப்பர் ஸ்டார்களின் அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒருவர் நல்ல திரைப்படம் எடுத்தால், ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து பாராட்டுவார். ‘ஜெய்பீம்’ படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்தே நான் அவரது அழைப்புக்காக காத்திருந்தேன். அவரை சந்திப்பதற்காகவே புதிய சட்டை ஒன்றை வாங்கி அணிந்து சென்றேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு சவுந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் செய்து அப்பாவுக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் இரண்டு கதைகள் இருந்தன. அதில் எனக்கு பிடித்த கதைதான் ரஜினிக்கும் பிடித்தது. அதுதான் ‘வேட்டையன்’” என்றார்.

x