நடிகர் ரஜினிகாந்த், 'வேட்டையன்' படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே ஓய்வெடுப்பதற்காக சில நாட்களுக்கு முன் அபுதாபி சென்றார்.
அங்கு புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான லுலு குழுமத் தலைவர் எம்.ஏ.யூசுப் அலியை சந்தித்துப் பேசினார். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்தார். இக்குழுமத்தின் சிஓஓ சைஃபி ரூபாவாலாவையும் சந்தித்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவியது.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவரவித்துள்ளது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 வருடங்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம். இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “என் நண்பர், லுலு குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுப் அலி இல்லாமல் இந்த கவுரவம் கிடைத்திருக்காது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலுக்குச் சென்ற ரஜினி, அங்கு வழிபட்டார். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.