சென்னை: ‘தளபதி 69’ படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என நடிகை பிரிகிடா பேசியிருக்கிறார்.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ஏகன், பிரிகிடா உள்ளிட்டப் பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இந்தப் படம் தொடர்பாக இந்து தமிழ் திசை யூடியூப் பக்கத்தில் நடிகை பிரிகிடா பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “கதையின் நாயகியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. சீனு ராமசாமி போன்ற இயக்குநர் படத்தில் நடித்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த உலகில் கைவிடப்பட்டவர்கள் என யாருமே கிடையாது. எல்லோருக்கும் அன்பும் ஆதரவும் உண்டு என்பதைத்தான் இந்தப் படம் காட்டுகிறது” என்றார்.
மேலும் நடிகர் விஜயின் அரசியல் பயணம் பற்றியும் அவர் சினிமாவை விட்டு விலகியது பற்றியும் கேட்டபோது, “அவரது ரசிகையாக எனக்கு இது கடினமான முடிவு. எதாவது ஒன்று நடந்து, இந்த முடிவை அவர் மாற்றிக் கொள்ள மாட்டாரா என்றும் தோன்றுகிறது. ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும்போது அவர் என்னைப் பார்த்ததும் ‘என்ன பவி டீச்சர்?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். ‘தளபதி 69’ படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்” என்றார்.