’தர்மதுரை2’ கதை ரெடியா இருக்கு - இயக்குநர் சீனு ராமசாமி பேட்டி!


சென்னை: “ ‘தர்மதுரை2’ படத்தின் கதை தயாராக இருக்கு. விஜய்சேதுபதி என்னைத் தேடி வரும்போது நிச்சயம் படம் வரும்” என்று கூறியிருக்கிறார்.

’மாமனிதன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. நடிகர்கள் யோகிபாபு, ஏகன், பிரிகிடா உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். படம் குறித்து இந்து தமிழ் உடனான நேர்காணலில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “செல்லமே கிடைக்காத ஒரு பையன்தான் செல்லதுரை. சிறுவயதில் கைவிடப்பட்ட அவனுக்கு முகம் தெரியாதவர்கள் கொடுக்கும் அன்பும் ஆதரவும்தான் இந்தக் கதை. இந்த உலகத்தில் கைவிடப்பட்டவர்கள் என யாரும் கிடையாது. எல்லோருக்கும் எதோ ஒரு வகையில் அன்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதைத்தான் இந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

சமீபகாலத்தில் தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற விஷயத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பது பற்றிய கேள்விக்கு, “சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பது புது விஷயம் கிடையாது. சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் ஒரு கான்செப்ட்தான். ’நீர்ப்பறவை2’, ‘தர்மதுரை2’ என இரண்டு கதைகள் தயாராக வைத்திருக்கிறேன். எதை முதலில் எடுப்பேன் எனத் தெரியவில்லை. விஜய்சேதுபதியிடம் ‘தர்மதுரை2’ கதை பற்றி சொல்லியிருக்கிறேன். ஆனால், அவருடைய பிஸி ஷெட்யூலை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. சேதுவாக என்னிடம் வந்து எப்போது படம் செய்யலாம் என்று சொல்கிறாரோ அப்போது ‘தர்மதுரை2’ நிச்சயம் நடக்கும்” எனத் தெரிவித்தார்.

x