'ஜப்பான்’ படத்தோல்விக்கு நடிகர் கார்த்தி தான் காரணம் என எழுத்தாளர் பவா செல்லதுரை பேசியிருக்கும் காணொளி புது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
படங்களின் தோல்விக்கு கதையமைப்பு, காட்சிப்படுத்திய விதம், சர்ச்சை என எதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால், அதன் கதாநாயகன் தான் முக்கிய காரணம் என ‘ஜப்பான்’ படத்தோல்விக்கு நடிகர் கார்த்தியைக் கைக்காட்டி இருக்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. அவருடைய சமீபத்திய நேர்காணலில், “’ஜப்பான்’ என்று நான் ஒரு படம் நடித்தேன். அது படுதோல்வி அடைந்தது. டார்க் ஹூயூமராக நன்றாக வந்திருக்க வேண்டிய படம் அது.
ஹூயூமர் என நினைத்து சில இடம் சீரியஸாக வந்துவிட்டது. ஹீரோவிடம் இல்லாமல் முருகேஷ் பாபு, ராஜூமுருகனிடம் கொடுத்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
தமிழ் சினிமாவில் எல்லோருடைய தலையீடும் இருக்கிறது. ஹீரோ, தயாரிப்பாளர், எடிட்டர் என இத்தனைப் பேர் தலையிட்டால் கதையாசிரியரும் இயக்குநரும் குழம்பிப் போகிறார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என அந்தக் கதையை குழப்பி இயக்குநரின் கலை முற்றிலுமாகப் போய்விடுகிறது. இதுவே படம் தோல்வியடைய முக்கியக் காரணம்” என பவா செல்லதுரை பேசியிருக்கிறார்.
ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியானத் திரைப்படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25ஆவது படம் என்பதால், இந்தப் படம் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிப் பெறவில்லை. இதற்கான காரணமாக பவா செல்லதுரை ஹீரோ, தயாரிப்பாளரைக் கைக்காட்டி இருப்பதால், ‘ஜப்பான்’ தோல்விக்குக் காரணம் நடிகர் கார்த்தி தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.