கோழிப்பண்ணை செல்லதுரை: திரை விமர்சனம்


தேனி, ஆண்டிப்பட்டியில் இருக்கும் செல்லதுரையின் (ஏகன்) அம்மா தகாத உறவால் செல்லத்துரையையும் அவன் தங்கை சுதாவையும் (சத்யாதேவி) சிறுவயதிலேயே விட்டு விட்டு தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேடி சென்று விடுகிறார். இதனால் கோபப்படும் செல்லதுரையின் அப்பா செல்லதுரையையும் அவன் தங்கையையும் பாட்டி பொறுப்பில் விட்டுட்டு அவரும் தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தனியே சென்று விடுகிறார். கவனித்துக் கொண்ட பாட்டியும் கொஞ்ச நாளிலேயே இறந்து போக, கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவன் தங்கைக்கும் ஆதரவாக இருக்கிறார் அந்த ஊரில் இருக்கும் பெரியசாமி (யோகிபாபு).

தன்னுடைய கோழிப்பண்ணையிலேயே செல்லதுரைக்கு வேலையும் போட்டுக் கொடுத்து செல்லதுரையையும் சுதாவையும் படிக்க வைத்து ஆளாக்குகிறார். சின்ன வயதில் அம்மா செய்த காரியத்தால் ஊரில் பல சந்தர்ப்ப சூழ்நிலையால் அவமானப்படுத்தப்படுகிறார் செல்லதுரை. இன்னொரு பக்கம் கல்லூரிக்கும் சென்று படிக்கும் தங்கைக்கு காதல் வருகிறது. அம்மாவைப் போல தங்கையும் தனக்கு அவமானத்தைத் தேடி தரப் போகிறாளா எனக் கோபப்படுகிறான் செல்லதுரை. இதன் பிறகு, சுதா என்ன முடிவெடுக்கிறார்? இதை ஒட்டி நடக்கும் சம்பவங்கள் என்னென்ன என்பதுதான் ’கோழிப்பண்ணை செல்லத்துரை’.

அன்பும் பொறுமையும் வாழ்க்கையில் எப்படியான மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதுதான் படத்தின் கரு. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு கொடுப்பது, உணர்வுப்பூர்வமான காட்சிகளைப் பக்குவமாக கையாண்டிருப்பது என முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகை யோகிபாபு. வழக்கமாக யோகிபாபு படங்களில் வரும் உருவகேலிகள் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ற நகைச்சுவைக்கு முயன்றிருப்பது ஆறுதல்.

கதையின் நாயகன் ஏகன் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தங்கை கதாபாத்திரத்தில் வரும் சத்யாவின் நடிப்பும் நன்று. கதாநாயகியாக வரும் பிரிகிடாவுடைய நடிப்பில் பல இடங்களில் செயற்கைத்தனம் துருத்திக் கொண்டு நிற்கிறது. ரகுந்ததனுடைய இசை கதைக்கு ஏற்ற இசையை கொடுத்திருக்கிறது. அசோக்ராஜூடைய ஒளிப்பதிவு தேனியின் அழகை படம் பிடித்து காட்டியிருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, ஆபாச வசனங்கள் இல்லாதது, ரத்தம் தெறிக்கும் வன்முறை இல்லாதது என கதையில் ஆறுதல் தரும் விஷயங்கள் நிறையவே. படம் ஆரம்பித்து முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதி தொடங்கினாலும் கதையின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக பார்வையாளர்களுக்கு கடத்தத் தவறுவது பெரிய சறுக்கல். செல்லதுரை கதாபாத்திரத்தின் மேல் பார்வையாளர்களுக்கு உணர்வுப்பூர்வமான கனெக்ட் வரும்படியான காட்சிகள் எதுவும் பெரிதாக இல்லை. போலவே, அண்ணன் - தங்கை இடையிலான அன்பை அழுத்தமாக உணர்த்தும்படியான விஷயங்களும் படத்தில் இல்லாதது மைனஸ்.

நிறைய இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங். அதேபோல, தாமரை செல்வியை (பிரிகிடா) இவ்வளவு தூரம் அவர் வெறுத்து ஒதுக்குவது ஏன், இவ்வளவு வெறுத்தும் செல்லதுரையை அவர் விடாப்பிடியாக காதலிப்பது ஏன் எனப் பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. இயக்குநர் சீனு ராமசாமியின் படம் என்கிற எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்களுக்கு திரைக்கதையில் பெரிய ஏமாற்றம்.

கடைசியாக அன்பும் பொறுமையும் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கிறது என சொல்கிறார்கள். ஆனால், கோழிப்பண்ணை செல்லதுரை ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறார்.

x