உங்களைப் போன்ற பிரபலங்கள் இதை ஆதரிக்கலாமா..?


ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ‘ஃபர்ஹானா’, ‘தீராக் காதல்’ படங்கள் வெளிவந்தன. தற்போது தமிழ் படங்களில் மட்டுமல்லாது மலையாளத்திலும் தொடர்ச்சியாக பிஸி நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முறையாக இணைந்து நடித்துவரும் படம், ‘டியர்’. முதல்கட்டமாக இந்தப் படத்தின் பாடல் ஷூட் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்துள்ளது. ஷூட் முடிந்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ஸீ வேர்ல்டு ஆஸ்திரேலியா’ என்கிற தீம் பார்க்கிற்கு சென்றிருக்கிறார்.

அங்கே, டால்ஃபின் மீன்களை வைத்து காட்சிகள் நடத்தும் இடத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கே டால்ஃபின் காட்சி நேரம் முடிந்துவிட்டது என்றபோதும் அங்கே வேலை செய்யும் ஒரு தமிழர், “இவர் பிரபலமான இந்திய சினிமா நட்சத்திரம்” என்று எடுத்துக்கூறி, டால்ஃபினைத் தொட்டுப் பார்க்க அனுமதி பெற்றுக்கொடுத்தாராம்.

’டியர்’ படத்திலிருந்து...

ஐஸ்வர்யாவை டால்ஃபின் குளத்துக்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளர், ஒரு டால்ஃபினை குரல் கொடுத்து அழைக்க, அது கரையை நோக்கி ஓடி வருகிறது. தண்ணீர் கணுக்கால் அளவு உள்ள கரையில் வந்து அமர்ந்துகொண்டு, பயிற்சியாளரைப் பார்த்து வாயைப் பிளக்கிறது. அப்போது அவர், ஒரு சிறிய மீனை எடுத்து அதை ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கொடுக்க... அதை அவர், வாயைப் பிளந்து கேட்கும் டால்ஃபினின் வாயில் போடுகிறார். அதை விழுங்கிக்கொண்டு அது நன்றியுடன் வாலாட்டுகிறது.

அந்தக் காட்சியைப் பார்த்து சந்தோஷப்பட்டபடி, உடலை அசைத்து நடனமாடியபடி டால்ஃபினைத் தொட்டுப் பார்க்கிறார் ஐஸ். அப்போது டால்ஃபின் உடலை அசைத்துக் கொடுக்கிறது. அதைத் தொட்டுப் பார்த்து மகிழும் ஐஸ், இவை அனைத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்தச் செயலை நெட்டிசன் ஒருவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். “வாட்டர் தீம் பார்க்குகளை ஆதரிக்க வேண்டாம்! குறிப்பாக, உங்களைப் போன்ற பிரபலங்கள், இதுபோன்ற மிக மோசமான வணிகக் கட்டமைப்புகளை ஆதரிப்பது, டால்ஃபின் போன்ற உயிர்களை இந்த உலகத்திலிருந்து இயற்கைக்கு மாறாக அப்புறப்படுத்திவிடும்.

டால்ஃபின் போன்ற பாலூட்டி கடல் விலங்குகள், இதுபோன்ற தீம் பார்க்குகளில் மக்களை மகிழ்விக்கும் வழிகளில் மனிதர்களை அன்பு செய்ய நிர்பந்திக்கப்படுகின்றன. டால்ஃபின்கள் போன்றவை திறந்த கடலில் வாழ்வதற்கானவை. மக்களை மகிழ்விப்பதற்காக அவை தண்ணீர் குளங்களில் அடைக்கப்பட்டு கூண்டுகளில் வாழும் கொடுமையை அனுபவிக்கின்றன.

டால்ஃபின்கள் பெரும்பாலும் சிறு குஞ்சுகளாகப் பிடிக்கப்பட்டு அவற்றின் தாய் - தந்தையிடமிருந்து பிரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?” என ஐஸ்வர்யாவுக்கு குட்டு வைத்திருக்கிறார் அந்த நெட்டிசன். ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு இன்னும் எதிர்வினை ஆற்றவில்லை என்றபோதும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சூடு கொடுத்துள்ள அந்த நெட்டிசனின் பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன!

x